தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வங்கி தொடக்கம் - கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.


 தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வங்கி தொடக்கம் - கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.


தமிழகத்தில் முதல்முறையாக

தூத்துக்குடியில்  மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை  பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி  திறந்து வைத்தார். 


தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்,  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலையில் இன்று (08.11.2023) திறந்து வைத்தார். 


பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்த அத்தனை அறிவிப்புகளையும் எவ்வாறு நிறைவேற்றி வருகின்றார்களோ அதேபோல் அவர்களின் உத்தரவின்படி  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். 


இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். மீனவர்களின் கோரிக்கைகளை மீனவர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றிய முதலமைச்சர்   தமிழ்நாடு முதலமைச்சர் தான்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி  தெரிவித்தார்.


நிகழ்ச்சியில்  அமைச்சர் பி.கீதாஜீவன்  தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதைப்போல மீனவர்களுக்கு கடன்கள் வழங்குவதற்காக இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. வங்கி அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில்; உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும்.  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீண்ட நாட்களாக பட்டா வழங்கப்படாமல் இருந்த சிங்காரவேலர் குடியிருப்பு மற்றும் சுனாமி குடியிருப்பில் உள்ள மீனவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளார்கள். இவ்வாறு  தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்  தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தபடி இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மீனவர்களுக்கு இந்த வங்கி மூலம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகள் எல்லாம் செய்யப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளுக்கு அரசு என்னென்ன நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்களோ அதேபோன்று மீனவர்களுக்கும் திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். இந்த வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் பயன்பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.


மீனவர்களுக்குகென்று தனி மாநாட்டை நடத்தியவர் நமது  தமிழ்நாடு முதலமைச்சர் தான். அந்த மாநாட்டில் மீனவர்களுக்கான 10 வாக்குறுதிகளை வழங்கினார்கள். குறிப்பாக மீன்பிடி தடைக்கார நிவாரணம் ரூ.5000/-ல் இருந்து ரூ.8,000/-ஆக உயர்வு, கடலோர பகுதியில் வீடுகள் கட்டி குடியிருக்கும் மீனவர்களுக்கு பட்டா, மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல், மண்ணெண்ணெய் அளவு உயர்வு உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை அளித்தார்கள். 


நலவாரியத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களும் உழைக்கிற வரை உறுப்பினராக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர்  மீனவர் நலவாரியத்தை உருவாக்கினார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் , நலவாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து மீனவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அந்த வகையில் இன்று நிதியாதாரம் உள்ள கூட்டுறவு வங்கியாக இந்த வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் எல்லா பகுதியிலும் உருவாக்கும் நிலை ஏற்படுத்தப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள் என  மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல் (வடக்கு), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், உமரிசங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post