தூத்துக்குடி : காவல் நிலைய ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் - காவல்துறை அஞ்சலி.!
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஐயப்பன். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். இவர் கடந்த 12ஆம் தேதி இரண்டு நாள் விடுமுறையில் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஊருக்கே சென்றார்.
அங்கு நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது பூத உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கடந்த 2000ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றி வந்தவர் பின்னர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது உடல் இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மறைவுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர டிஎஸ்பி சத்யராஜ், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய பாகம் காவல் நிலையம் உட்பட அனைத்து காவல் நிலையத்திலும் அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.