*தெருநாயால் நெல்லையில் நிருபர் பலி! நாய்கள் காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை !* நாட்டில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக சேகரித்து ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் அரசுக்கும் தெரியப்படுத்தும் உன்னத பணியை மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விபத்துகளில் சிக்கி பலியாகும் செய்தி நம் நெஞ்சை உலுக்குகிறது. மரணங்கள் வாயிலாக பாடங்களைப் படிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். குறிப்பாக சென்னையில் புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகாலில் விழுந்து மறைந்ததை கடந்த ஆண்டு பார்த்தோம். அதன் பிறகு விழித்துக் கொண்டு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிர படுத்தப்பட்டதையும், பாதுகாப்பாக செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். தற்பொழுது நெல்லையில் பாலிமர் செய்தியாளர் முத்துக்குமாரசாமி சாலையின் குறுக்கே திடீரென்று வந்த நாய் மீது மோதி தலையில் அடிபட்டு இறந்துவிட்ட செய்தி மிகவும் சொல்லொண்ணாத துயரத்தை தருகிறது. இம் மரணச் செய்தி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக மாறி உள்ளது. நாடு முழுவதும் சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றி திரியும் மாடுகளால் பிரச்சனை ஏற்பட்டதை சுட்டிக்காட்டி வந்த நாம், இன்று தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளையும் விபத்துக்களையும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலைகளையும் இன்னும் சொல்லப்போனால் செய்தியாளர் ஒருவரின் விலைமதிப்பில்லாத உயிரே பறிபோய் விட்டு நிலையையும் காண்கின்ற பொழுது உடனடியாக விழித்து தெருவில் சுற்றித் திரிகின்ற நாய்களை பிடித்து இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்தோ அல்லது குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு இடத்திலாவது தெரு நாய்களை பிடித்து அடைத்து பாதுகாத்து பராமரிப்பதற்கான காப்பகங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்தோ பொது மக்களை பாதுகாக்க வேண்டும். பள்ளி மாணவர்களை கடித்த சம்பவங்களையும் பார்த்திருக்கின்றோம். வெறிபிடித்த நாய்கள் சில, ஆடுகளையும் அதன் குட்டிகளையும் துரத்திச் சென்று கடிக்கின்ற சூழல்களையும் பல்வேறு இடங்களில் பார்க்கின்றோம். ஆகவே உடனடியாக மக்கள் நலன் கருதி நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக செய்தியாளர் நெல்லை முத்துக்குமார் மரணமுற்ற செய்தியில் இருந்து பாடமாக ஏற்று நாடு முழுதும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.