கேரள எல்லையில் கூட்டாற்றில் வெள்ளம்...தனித்தீவாக சிக்கித்தவிக்கும் தமிழக கிராம மக்கள்... தளிஞ்சி கிராம மக்கள் வேதனை தீருமா?

உடுமலை அருகே  கூட்டாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் பாதையை கடக்க முடியாமல் தளிஞ்சி மலைகிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணார் செல்லும் சாலையில் உள்ளது சின்னார். இரு மாநில எல்லையான இப்பகுதியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் தளிஞ்சி மலை கிராமம் உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அதனை ஒட்டிய தளிஞ்சி வயல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.  கிராம மக்களுக்கு எந்த ஒரு தேவை என்றாலும் சின்னார் பகுதிக்கு வேண்டும். 

சின்னாறுக்கு வரும்போது அந்த பகுதியில் இடையில் பாயும் தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகியவை சந்திக்கும் கூட்டாற்றை கடந்து தான் வந்து செல்ல வேண்டும்.  கூட்டாற்றின் நடுவே உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தியே கிராம மக்கள் வந்து சென்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக கூட்டாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் கூட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பருவமழை காலங்களில் கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அச் சயங்களில் ஆற்றை கடந்து செல்வது ஆபத்தானது.  ஒரு கரையில் இருந்து மறு கரை வரை கயிறு கட்டி அதை பிடித்துக்கொண்டும், பரிசல் மூலமும் செல்வது வழக்கம். 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கின்போது  கடக்க முற்பட்ட 7 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.  

அப்போது தண்ணீரில் குடும்ப அட்டைகள், ஆதார் அடையாள அட்டை அடித்து செல்லப்பட்டது. அதற்கு மாற்றாக குடும்ப அட்டை கேட்டு இதுவரையும் வழங்கப்படவில்லை. அந்த சம்பவத்துக்கு பிறகு , வெள்ளத்தின் போது கடந்து செல்ல முற்படுவதில்லை. கேரளா மாநில எல்லைக்குள் சென்று அதன் பின்பே சின்னார் பகுதியை அடைய வேண்டும். சில சமயங்களில் அம்மாநில வனத்துறையினர் எல்லையை அடைத்து விடுவார்கள். அப்போது அவசர தேவைக்கு கூட வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. பலமுறை உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை ஆட்சியாளர்கள் செய்யவில்லை. 

கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகரித்துள்ளது. அதனால் நாள் முழுவதும் வெள்ளம் வடியும் வரை காத்திருந்து அதன் பின்பே வந்து செல்ல வேண்டியுள்ளது. பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் இப்பகுதி மக்கள் சிரமம் கண்ணீர் வரவைப்பதாக உள்ளது. எனவே இந்த பகுதியில் விரைவில் பாலம் அமைத்தால் தனித்தீவாக சிக்கியுள்ள தளிஞ்சி கிராம மக்களின் வேதனை தீரும்.. 

Previous Post Next Post