பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் விடிய விடிய வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை தென்மாத்தூரில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, கரண் மகளிர் கல்லூரி உள்பட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக அவருக்கு சொந்தமான சொத்து உள்ள இடங்களில் சோதனை செய்ய புகுந்தனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி அமைச்சர் எ.வ.வேலூவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுழற்சி முறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
விடிய விடிய நடந்த இந்த சோதனை தற்போது 24 மணி நேரத்தை கடந்து செல்கிறது. கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.
அமைச்சர் எ.வ வேலு ஆதரவாளர்களான மீனா ஜெயக்குமார், திமுக இலக்கிய பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராம் கட்டுமான அலுவலகம் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது.
நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள மீனா ஜெயக்குமார் வீடு, பீள மேட்டில் கட்டுமான நிறுவன அலுவலகம், சவுரிபாளையம் பிரிவில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கரூரில் தொடங்கிய வருமான வரித்துறையின் சோதனை கரூர் மாநகராட்சிக்குட பெரியார் நகர் பகுதியில் உள்ள முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசபின் சகோதரியான பத்மாவின் வீடு, காந்திபுரத்தில் சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.