அதிமுக அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை : மேல் நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல்.!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ( பத்து மசோதாக்கள் ) ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதுதவிர அதிமுக அமைச்சர்கள் ஊழல்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு, மேல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆளுநர் தரப்புக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டுள்ளார்.
அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ( சுகாதார நலத்துறை ), பி.வி. ரமணா ( வணிக வரித்துறை ) ஆகியோர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், விஜயபாஸ்கர் ( போக்குவரத்து ), ( கே.சி. வீரமணி ( வணிகவரி ) ஆகியோர் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் ஒப்புதல் கிடைத்திருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.