திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் கோவை கவுன்சிலர் மற்றும் அவரது குழந்தை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை போத்தனூர் செட்டிபாளையம் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் செட்டிபாளையம் பேரூராட்சியின் பத்தாவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். மேலும் திமுக வட்ட செயலாளராகவும் இருக்கிறார். இவரது மனைவி இந்துமதி.இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தையின் பெயர் காஜல். இவர்கள் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ கார் இவர்களது கார் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் கவுன்சிலர் சந்தோஷ் குமார் மற்றும் குழந்தை காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மனைவி இந்துமதி திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மோதிய காரில் வந்த ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
(கீழே படத்தில் இருப்பது சந்தோஷ்குமார் காரின் மீது மோதிய பி.எம்.டபிள்யூ கார்)