திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் சாரை சாரையாக வந்து தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு குவிந்து வருகிறார்கள்.
திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணியாற்றுகிறார்கள். திருப்பூரில் குழுவாகவும், நிறுவனங்களிலும் மாதக்கணக்கில் தங்கி பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வார்கள்.
இதனால் கடந்த 2 நாட்களாக ரயில்களில் கூட்டம் பிதுங்கி வழிகிறது. சுமார் ஒன்றரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மொத்தமாக இடம்பெயரும் இந்த தீபாவளி நேரத்தில் போதுமான ரயில்வசதி இல்லாததால் ஏராளமானவர்கள் திருப்பூரிலேயே தங்கி தீபாவளி கொண்டாடுகிறார்கள். இவர்கள் திருப்பூரில் உள்ள கடைவீதிகளில் தீபாவளி நாளான இன்று பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர். திருப்பூர் மத்திய பஸ் நிலையம், புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் ஆபீஸ் வீதி, புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் சாரை சாரையாக வந்து பொருட்கள் வாங்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது.
ஒவ்வொருவரும் துணிக்கடைகளிலும், பேன்சி கடைகள் உள்ளிட்ட கடைகளிலும் திரண்டு பல்வேறு பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதனால் ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் காணப்படுகிறது. திருப்பூரின் முக்கிய கடைவீதியான புதுமார்க்கெட் வீதியில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்து பொருட்கள் வாங்க குவிந்து வருகிறார்கள்.
பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் இங்கு பொருட்களை வாங்கி விட்டு ரயில்களில் ஏறி சொந்த மாநிலம் செல்வார்கள். ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் திரும்பி வந்து இருக்கும் இடத்திலேயே தங்கி விட்டு நாளையும் ரயிலை தேடி செல்வார்கள். இப்படி வடமாநில தொழிலாளர்கள் குவிய தொடங்கி உள்ளதால் திருப்பூரில் உள்ள கடைவீதிகளில் வியாபாரம் களை கட்டுகிறது. நடைபாதை கடைகளிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து வருகிறது.
சிறிய கடைகள், நடைபாதை கடைகளுக்கு வடமாநில தொழிலாளர்களால் நடக்கும் வியாபாரம் தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று மாலை வரை வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.