கண்ணகி நகரில் பெண்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ

 கண்ணகி நகரில் பெண்களை குறி வைத்து தாக்கும் சைக்கோ நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை கண்ணகி நகர், 57வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் உஷாராணி இவரது கணவர் பாலு, நேற்று மாலை உஷா ராணி தண்ணீர் பிடிக்க வீட்டிற்கு அருகில் சென்ற போது எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற நபர் ஆபாசமாக பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று மாலை அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் கண்ணகி நகர் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தனர். காவல்துறையினரை வெங்கடேஷை அழைத்து வந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் இன்று காலை உஷாராணியின் கணவர் பாலு வீட்டிற்கு வாசலில் அமர்ந்திருந்த போது வெங்கடேஷ் மிரட்டி அழைத்து தாக்கி இருக்கிறார். தட்டிக் கேட்ட மனைவியையும் கழுத்து, கை, காதில் நகத்தால் கீரி காயம் ஏற்படுத்தியுள்ளார். 

பக்கத்து வீட்டுக்காரர் குமார் இதனை தடுக்க முயன்ற போது வெங்கடேஷின் மனைவி ராதிகா கத்தியை கொண்டு வந்து கொடுத்ததால் அதனை கொண்டு குமாரின் விலாவில் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். குமாரின் மகள்களான அர்ச்சனா, ஜெனிபர் இதனை தடுக்க முயன்ற போது இருவரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கல்லூரி மாணவி அர்ச்சனாவிற்கு கை விரலிலும், ஜெனிபருக்கு மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. 

அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வீடு திரும்பிய குமாருக்கு திடீரென மூச்சு இறைக்க ஆரம்பித்தால் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கத்திக்குத்து காயம் நுரையீரல் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 6 மாத காலமாக வெங்கடேஷன் அப்பகுதி பெண்களை மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது, தாக்குவது, பயமுறுத்துவது, சில நேரங்களில் கத்தியை காட்டி குத்தி விடுவதாக மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் பெண்கள் பயந்து போயுள்ளனர். 

பெண்களை மட்டும் குறி வைத்து தாக்கி, மிரட்டி வந்த சைக்கோ நபரை காவல்துறை கைது செய்யவும் கோரிக்கை வைக்கின்றனர். 

அதே போல் நேற்று மாலை பிரச்சினை செய்த நபரை காவல்துறை விடுவித்ததால் தான் இன்று கத்தியால் குத்தியதாக காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

இது குறித்து கண்ணகி நகர் ஆய்வாளரிடம் கேட்ட போது நேற்று எச்சரித்து அனுப்பினோம், இன்று வெங்கடேஷின் மனைவி ராதிகாவை காவல்நிலையம் அழைத்து வந்துள்ளோம். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளோம் விரைவில் தப்பியோடிய நபரை கைது செய்து விடுவோம் என தெரிவித்தார்.

Previous Post Next Post