குடிசைவாசிகள் ஆவணங்களை திருடி ஜி.எஸ்.டி.பதிவு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் நூதன மோசடி.. திருப்பூரில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் பெண்கள்!

திருப்பூர் மாவட்டம் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில்  ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி யை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு வர்த்தகத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பனியன் ஆடைகளை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்கிறது. 

மேலும் பின்னலாடை துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன்  பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) கடந்த ஜூலை மாதம் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 0% 5% 12% 18% என வரி விதிக்கப்பட்டது.

 இதன்படி பின்னலாடைக்கு 5% வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னனு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும் என 2018 ஆம் ஆண்டு முதல் சட்டம் அமுலுக்கு வந்தது. 

இதனை அடுத்து திருப்பூரில் வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த சோதனையில் சிக்காமல் வரி செலுத்துவதில் மோசடி செய்ய போலி ஜிஎஸ்டி பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.

 தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டரை வீதி பெத்திச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நிராகரிக்கப்பட்டன. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் ரூ. 50 லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்யப்பட்டு  ஜிஎஸ்டி வரி செலுத்தி நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது. 

சாப்பாட்டுக்கே வழி இன்றி குடிசை மற்றும் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் இந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 65 ஆயிரம் ரூபாய் செலுத்த கூட வழியின்றி தவிக்கும் தங்கள் பெயரில் லட்சக்கணக்கில் வரவு செலவு செய்யும் நிறுவனமா என அதிரச்சியடைந்தனர்.

 விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும்  கார்வேந்தன்,  விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல்  பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்று போலியாக சிம்கார்டு , வங்கி கணக்கு, போலியான நிறுவனம் என ஜிஎஸ்டி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் ஒரு நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி வர்த்தகம் நடைபெறறால் அதற்கான வருமான வரி உள்ளிட்டவற்றையும் அதிக அளவில் செலுத்த வேண்டும் என்பதால் பல பெயரில் போலியாக நிறுவனங்களை உருவாக்கியதும் மேற்படி போலி நிறுவனங்கள்  மூலமாக வட மாநில வியாபாரிகளுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லும் போது போலி பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது . 

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் வணிகவரித்துறைக்கு நடவடிக்கை கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் 5000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து  விசாரணை மேற்கொண்டு ஏழை பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Previous Post Next Post