திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊர்வலத்துக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கினார்கள்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தென் தமிழ்நாட்டுக்கு உட்பட்ட திருப்பூர் உள்ளிட்ட 22 இடங்களில் இன்று ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டான ஆலாங்காடு கார்னரில் மாலை 4.15 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பாரதமாதா திருவுருவப்படம், டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வல்கர் ஆகியோரது படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. வாத்திய இசைக்குழு முன்செல்ல சீருடை அணிந்த ஸ்வயம் சேவகர்கள் வாத்திய இசைக்குழுவினர்களின் இசைக்கேற்ப அடி வைத்துச் சென்றனர். காவிக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ஊர்வலம் சென்ற பாதையில் நின்றிருந்த மக்கள் பூக்களைத்தூவி பேரணியாகச் சென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆலாங்காடு தொடங்கி, கருவம்பாளையம், வெடத்தலாங்காடு, எருக்காடு, பூச்சக்காடு, கே.வி.ஆர் நகர் வழியாக செல்லம் நகர் நால்ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு முன்பு நிறைவடைந்தது. அங்கு காவிக்கொடி ஏற்றப்பட்டு பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் சிவில் இஞ்சினியர்கள் அசோசியேசன் முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சமி, மாவட்ட தலைவர் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச ஸ்வாமிகள் ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் தமிழக மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஊர்வலம் செல்லும் பாதையிலுள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் காவல்துறையினர், உளவுப்பிரிவு காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அதிகளவில் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மிகவும் அமைதியாக நடந்தது.