வேலை செய்த நிறுவனத்தின் தகவலை திருடி சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முயற்சி.! - கைவரிசை காட்டிய 5 பொறியாளர்கள் கைது.!
தாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தின் மென்பொருள் தகவல்களை திருடி, சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முயற்சித்த மென்பொருள் பொறியாளர்கள் ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் செயல்படும் குறிப்பிட்ட ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிதி மேலாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் "நாங்கள் 'அமேசான் வெப் சர்வீஸ் மூலம் சாப்ட்வேர்களை தயாரித்து, வங்கிகளுக்கு கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த சாப்ட்வேர்களின் ரகசியத்தை எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிலர் திருடி உள்ளார்கள்.
இந்த விஷயம் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மூலம் தெரியவந்தது. நாங்கள் தயாரிக்கும் சாப்ட்வேர்களின் ரகசியத்தை திருடிய அவர்கள், தனியாக கம்பெனி தொடங்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடியாக கருதுகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பணியாளர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர்களின் விசாரணையில் ஐந்து பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் எவ்வாறு திட்டமிட்டனர் என்பதை போலீசார் தங்கள் விசாரனையில் கண்டு பிடித்தனர்.. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில்..
அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் குற்றவாளிகள் தங்கள் நிறுவனத்தின் பிரதான சர்வரில் புகுந்து கிளையண்ட் டேட்டாவைத் திருடுடியிருக்கிறார்கள் .
அடுத்த நாள், ஐந்து பேரும் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தங்கள் அலுவலகங்களுக்கு எதுவும் நடவாதது போல வேலைக்குத் திரும்பியுள்ளனர். தனது நிறுவன தரவுகள் திருடப்பட்டு ஆறு வருடங்களாக அதன் நிறுவனர் கட்டியெழுப்பிய நிறுவனம் தன் கண் முன்னே நொறுங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த உரிமையாளருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தது. இது குறித்த ஆலோசனையில் இறங்கிய அதன் நிறுவனர் அமெரிக்காவில் இயங்கும் தளமான AWS, தனது வாடிக்கையாளர்களுக்கு அணுகலை மறுக்கும் கடவுச்சொற்களை மாற்ற அனுமதி வழங்கியதை அவர் அறிந்தார். அவர் அவர்களை அணுகியபோது, தெளிவான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாரை அணுகினார். இதனையடுத்து புலனாய்வில் இறங்கிய போலீசார் இணைய நெறிமுறை முகவரி மற்றும் சேவையகத்தை அணுகி பிற தொழில்நுட்ப விவரங்களைக் கண்காணித்தனர், மேலும் சில மணிநேரங்களில் ஒரு முன்னேற்றம் கிடைத்தது. டேட்டா திருட்டுக்காக அவர்கள் நிறுவனத்தின் சொந்த ஊழியர்களான சென்னையில் இருவர் மற்றும் பெங்களூரில் மூன்று பேரை தொடர்பு கொண்டனர்.
சென்னையில் செயல்படும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பொறுப்பான எடிசன், 29, சர்வரை அணுகி, டேட்டாவை திருடியதையும், அந்த நேரத்தில் அவர் மேலும் நான்கு பேருடன் கான்பரன்ஸ் காலில் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து சாப்ட்வேர்களை திருடி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த எடிசன் (29), ராம்குமார் (29), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த காவ்யா (29), பெங்களூருவைச் சேர்ந்த ரவீதா (40), புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த கருப்பையா (26) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் புகார் கொடுத்த நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றியவர்கள் என்பதும், இதில் எடிசன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் மென்பொருள் துறையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் திருடப்பட்ட மறுநாளே, ஐவரும் 'புளூ டான்' என்ற புதிய மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி, அவர்கள் திருடிய ஐந்து வாடிக்கையாளர்களை அணுகி, அவர்களின் தரவை மிகக் குறைந்த விலையில் வழங்கியதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு தரவுகளை திருட உதவிய மற்றொரு சாப்ட்வேர் இன்ஜினியரை ஆஸ்திரேலியாவில் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடவும், அவரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளனர். சரியான சமயத்தில் களமிறங்கி ஆஸ்திரேலியா வரை நீண்ட தகவல் திருட்டு நெட்வொர்க்கை சமயோசிதமாக பிடித்த சைபர் கிரைம் போலீசாரை ஐடி துறையினர் வெகுவாகு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.