அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் மோசடி - நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
வழக்கில் ₹191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் இதில், ₹180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தீர்ப்பு
சென்னை அடையாறு பகுதியில் ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீடுகளுக்கு அதிகமான வட்டி தருவதாக கூறியதை நம்பிய பல பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
அவர் அளித்த அந்த புகாரின் பேரில், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள் என 17 நிறுவனங்களின் இயக்குநர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான அப்பாதுரை, இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (20-11-23) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடர்பான சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், இதில் 180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.