இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டைப்பாக்கு பறிமுதல்.!- மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை.!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்பு வெளியேற அனுமதி வழங்குகின்றனர். சில சமயங்களில் அதையும் மீறி நடக்கும் முறைகேடு மற்றும் கடத்தல்களைமத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் அதனை தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருந்து 40 அடி நீளமுள்ள 4 கன்டெய்னர்களில் கடந்த வாரம் பழைய துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர். அப்போது, பழைய துணிகள் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு உள்பகுதியில் கொட்டைப்பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 64 டன் கொட்டைப்பாக்கு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் கொட்டைப்பாக்கை பறிமுதல் செய்தனர்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொட்டைப்பாக்குக்கு அதிக வரி செலுத்த வேண்டும். இதனால் வரி ஏய்ப்பு செய்வதற்காக கடத்தி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.