சத்தி அருகே புளியமரத்தில் கார் மோதி 4 பேர் பலி - ஒருவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே,  வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள புளியமரத்தில் (NH 948) கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியான சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்களா புதூர் புள்ளப்பநாய்க்கனூரை சேர்ந்தவர் பாலசும்பிரமணியம். இவர் ஈரோடு மண்டல போக்குவரத்து தொழிலாளர் தொமுச பேரவை பொதுச்செயலாளராக இருக்கிறார்.இவரது மகனும் , சத்தியமங்கலம் கொமாரபாளையம்  அங்காளபரமேஸ்வரி கோவில் பூசாரியுமான, கீர்த்திவேல்துரை (வயது 28) .  பங்களாபுதூர் ஏளுரைச் சேர்ந்த ராமதேவன் மகன்மயிலானந்தன் (வயது 30),  அதே பகுதியைசேர்ந்த சாந்தலிங்கம் மகன் இளையராஜா (வயது33,)  சத்தியமங்கலம் சதுமுகை கிராமத்தில் குடியிருந்து வரும் முருகன் என்பவரின் மகன் பூவரசன் (வயது 24 ),  பூவரசனின் சகோதரர் ராகவன் ஆகிய 5 பேரும் பால்ய கால நண்பர்களாவர்.

இவர்கள் தீபாவளி கொண்டாடி விட்டு, ஸ்கோடா சொகுசு காரில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது   வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகே கார் வந்தபோது, வளைவில் கார் நிலைதடுமாறி புளியமரத்தில் மோதியது. இதில்காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த கொடூர விபத்த்ல் காரில் பயணம் செய்த கீர்த்திவேல்துரை, மயிலானந்தன், பூவரசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இடிபாடுகளில் சிக்கி,பலத்த காயமடைந்த ராகவன் மற்றும் இளையராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்துபோன பூவரசனுக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

சம்பவம் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் 3 உடல்களை கைப்பற்றி, சத்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த இளையராஜா மற்றும் ராகவனுக்கு அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, கோபி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ராகவன் மரணமடைந்தார். இவரது உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இளையராஜா கோபி தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணமடைந்த கோவில் பூசாரி கீர்த்திவேல்துரைக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டு, வரும் 22ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் மரணம் நிகழ்ந்ததால், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சத்தி சதுமுகை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது இரு மகன்களும் தீபாவளி திருநாள் அன்று ஒரு சேர மரணமடைந்ததால், முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை பிணவறையில், சகோதரர்களின் உடல்களை பார்த்து, கதறியழுதது, காண்போர் கண்களில் நீரை வரவழைத்தது.  

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

Previous Post Next Post