தொழிற்சாலைகளுக்கு 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டனத்தை ரத்து செய்ய வேண்டும்... தொழில் துறையினர் எம்.எல்.ஏ., க்களிடம் மனு

 தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று எம்.எல்.ஏ.,க்களிடம் மனு அளிக்கப்படுகிறது.  திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ், அவர்களிடம் தொழில் துறையினர் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதிலும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) முதன்மையாக உள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில் முனைவோர்களால் குறைந்த பட்சம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் எங்களின் சிறு. குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக மூலப்பொருட்கள் விலையேற்றம். GST யில் உள்ள குறைபாடுகள். கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் என பல நெருக்கடிகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டு வருவதற்காக தொழில் முனைவோர்கள் கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 2022-ல் மின்சார வாரியத்தால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியது.

நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மின்சார கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 20 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியும், நிலைக் கட்டணம் கிலோ வாட்டுக்கு 430 சதவீதம் உயர்த்தியும், இதுவரை இல்லாத புதிய யுக்தியாக பீக் ஹவர்க்கான கட்டணம் நிர்ணயம் செய்து. 24 மணி நேரத்தில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் கணக்கீடு செய்து பீக் ஹவர் கட்டணமாக 15 சதவீதம் கூடுதலான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


உலகம் முழுவதும் மின்சார தேவைக்காக மின் உற்பத்தி செய்வதற்காகவும். ஊக்குவிப்பதற்காகவும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தொழில் துறையினரின் சொந்த கட்டிட மேற்கூரையில் சோலார்களை அமைத்துக் கொள்ள பல்வேறு அரசுகள் மானியம் வழங்கி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் மின்சார வாரியம் தொழில் துறையினரின் செலவில் தாங்கள் தொழில் கூடங்களில் சோலார் அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.53 காசும்+GST-யும் வரியும் வசூலித்து வருகிறது. கடுமையான மின் கட்டண உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சத்துக்கும் மேல் இயங்கி வரும் சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில்கள் 40 சதவீதத்திற்கும் மேல் கூடுதலாக மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம்.


10 சதவீதம் லாபம் கூட இல்லாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்ட 40 சதவீதம் மின் கட்டண உயர்வால் தொழில் துறையினர் பிற மாநிலங்களோடு போட்டி போட முடியாமல் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக. மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரமும். ஒரு கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழ்நாடு சட்ட மன்றத்தை தொழில் சார்ந்த பிரச்சனைக்காக கூடச் செய்வதற்கு தங்கள் தனி தீர்மானம் கொடுத்து, விவாதப் பொருளாக்கி மின் கட்டண உயர்வு, தொழில் சார்ந்த பிரச்சனைகளை விவாதிப்பதற்கு தாங்கள் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் தமிழக அரசிடம் முன் வைத்த கோரிக்கையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

முன்வைத்த கோரிக்கைகள்:

1.430 சதவீதம் நிலைக் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.

2.பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.

3.கூரைக்கு மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணம் முழுமையும் ரத்து செய்திட வேண்டும்.

4.மின்சார வாரியத்தால் தவறாக அவசர கோணத்தில் தயாரிக்கப்பட்டு தொழில் துறையினரின் மேல் திணிக்கப்பட்ட டாரிப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும்.

5.தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தொழில் புரிவதற்கும். தொழில்களை பாதுகாப்பதற்கும் உரியதாகும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் சிறு. குறு தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் கோரிக்கை முழுமையும் நிறைவேற்றி தருவதற்கு தங்களின் பங்கு எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Previous Post Next Post