காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் - 150 பாலஸ்த்தீனிய கைதிகளை விடவும் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.!


 காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் - 150 பாலஸ்த்தீனிய கைதிகளை விடவும் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.!

ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் சிறையிலுள்ள 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதுடன், காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.


ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 13 ஆயிரம் பொதுமக்கள் இஸ்ரேலிய குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர், இதில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளும் கொடூரமாக கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும் பொதுமக்கள் குடியிருப்பு, மருத்துவமனை, அகதிகள் முகாம் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டு வீசி இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது, உலகம் முழுக்க இஸ்ரேலுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் எதிராக பொதுமக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. மேலும் காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படைகள் பெரும் சேதத்தை சந்தித்ததுடன், ஹமாஸ் அமைப்பினரை கண்டுபிடிக்க முடியாமல் தினறியது.  

இந்நிலையில் பல நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.

கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஹமாஸ் மீதான போரை 4 நாட்களுக்கு நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிப்பதற்காக 4-நாள் போர் நிறுத்தப்படுகிறது. 46-வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில் 4 நாட்கள் போரை நிறுத்த இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம். 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இஸ்ரேல் மந்திரிசபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காசாவில் 14,100 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் சுமார் 6 ஆயிரம் பேர் குழந்தைகள்- சிறுவர்கள் எனவும், 4 பேர் பெண்கள் எனவும் ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post