வீட்டுக்குள் புகுந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள் - அதிராம்பட்டினத்தில் கொடூரம்.!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை 3 தெரு நாய்கள் நவம்பர் 27ம் தேதி திங்கட்கிழமை கடித்து குதறிய நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
குழந்தை பயத்தில் கத்தி கூச்சலிட்டதை கேட்டு வந்த தாய், தெரு நாய்களை விரட்டி, படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
தெருநாய்கள் வெறிபிடித்து சாலைகளில் வருவோர் போவோரை கடித்து குதறும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் சென்னையில் 30 க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிராம்பட்டினம் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலையில் இங்கு நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளில் தெருவில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ஒரு நாய்க்கு ரூ.1,450 கட்டணம் என ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்து உள்ளது. நாய்கள் தொல்லையும், அதன் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
அதிராம்பட்டினத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த . சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்