தூத்துக்குடி : தொடரும் கடத்தல், மீண்டும் ரூ.3 கோடி மதிப்புள்ள 49 டன் கொட்டை பாக்கு பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை.!


 தூத்துக்குடி : தொடரும் கடத்தல், மீண்டும் ரூ.3 கோடி மதிப்புள்ள 49 டன் கொட்டை பாக்கு பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை.!


கால்நடை தீவனம் என இறக்குமதியான 4 கண்டெய்னர்களில் மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ரூ.3.20 கோடி மதிப்புள்ள 49 டன் கொட்டை பாக்கு மூடைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் கழிவு துணி கண்டெய்னரில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள 65 டன் கொட்டை பாக்கு  கடத்தலில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடரும் கொட்டை பாக்கு கடத்தல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 10 தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் இருந்து கால்நடை தீவனம் எனக் குறிப்பிட்டு பெங்களுரை சேர்ந்த பிரீமியர் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 4 இருபது அடி  கண்டெய்னர்கள் இறக்குமதியானது. அந்த  பெட்டிகளில் பின்புறம் மறைத்து கொட்டைப் பாக்கு கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  குறிப்பிட்ட அந்த கண்டெய்னர் பெட்டிகளை நேற்று முன் தினம் சோதனையிட்ட அதிகாரிகள் கண்டெய்னர் பெட்டியின் முன் அடுக்குகளில் மாட்டுத் தீவனம் அடுக்கி வைத்து பின் பக்கத்தில் கொட்டை பாக்கு மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதனையடுத்து அதிலிருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 

49 டன் கொட்டை பாக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் குறிப்பிட்ட பெங்களூர் நிறுவனத்தை சோதனையிடச் சென்ற அதிகாரிகள், அங்கு அப் பெயரில் எந்த நிறுவனமும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடத்தலில் ஈடுபட்ட போலி நிறுவன நபரை தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதியாகும் சரக்குகளில் சமீப காலமாக கொட்டை பாக்குகளை கடத்தும் மாபியாக்களால் கோடிகளில் வருவாய் இழப்பு ஏற்படுவது சுங்கத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்க்கு சுங்க அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில்:-


"கொட்டைப்பாக்கு இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் கொட்டைப் பாக்கு இறக்குமதிக்கான குறைந்தபட்ச விலையை (எம்ஐபி) மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்திய விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க இறக்குமதியாகும் கொட்டைப் பாக்குக்கு  100% சுங்க வரி வசூலிக்கப்படுகின்றது. தற்போதைய விலையில் டன் ஒன்றுக்கு ரூ.6.75 லட்சம் இறக்குமதி வரியாக விதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க பல்வேறு வழிகளில் கொட்டை பாக்கு மறைத்து எடுத்து வரப்படுகிறது, இதற்க்கு சில சுங்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது, அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர், விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் அவர் கூறுகையில் மறைத்து கடத்துவது ஒரு வழி என்றால், 1998ம் ஆண்டு போடப்பட்ட இலங்கை - இந்தியா வரியற்ற வர்த்தக உடன்படிக்கையை பயன்படுத்தி (India-Sri Lanka Free Trade Agreement (ISFTA) இலங்கையிலிருந்து இறக்குமதி செய்வதாக கூறி ஆவணங்களை மோசடி செய்து வரி ஏய்ப்பு செய்வதும் நடைபெறுகிறது, இதன் மூலமம் ரூ.60 கோடி மதிப்புள்ள சுமார் நூறு டன் கொட்டைப் பாக்குகள் இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டு அது குறித்தும் விசாரனை நடை பெற்று வருவதாக தெரிவித்தார்.


இந்நிலையில் கடந்த வாரம் திருச்சி தலைமை சுங்க ஆணையரகத்திலிருந்து வந்த அதிகாரிகள் குழு தொடர் கடத்தல் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரனை நடத்தி விட்டு சென்றது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் பான் மசாலா சந்தை மிகப்பெரியது இதன் வர்த்தகம் ரூ.25,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, அனைத்து வகையான  குட்கா மற்றும் பான் மசாலாவின் முக்கிய பொருட்களில் மூலப்பொருளாக கொட்டைப் பாக்கு உள்ளது. உடல் நலக்கேடு, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டும் , தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு தடை விதித்து கடும் நடவடிக்கை எடுத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சதவீதம் விற்பனை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தூர கிழக்கு பகுதியில் ஆண்டுக்கு ரூ.2,500 கோடிக்கு மேல் சட்டவிரோத வர்த்தகம் நடைபெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 17, 2017 அன்று, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நவி மும்பையைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து நவி மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது கிடங்குகளில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட  இந்தோனேசியாவின் 240 மெட்ரிக் டன் கொட்டை பாக்குகளை கைப்பற்றியது.


அதே ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி  , அகமதாபாத்தில் உள்ள ஒரு நபரை   வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) கைது செய்து, 120 மெட்ரிக் டன் எடையுள்ள இந்தோனேசியாவின் கடத்தப்பட்ட பாக்குகளை பறிமுதல் செய்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில்அவர்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களான மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது தெரியவந்தது. 


கடந்த வருட இறுதியில் இந்தோனேசியாவில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் கொட்டை பாக்கு கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து 

இக்கடத்தலில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வந்த ஜஸ்பிர் சிங் என்பவர் அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த அவரை கைது செய்ய அஸ்ஸாம் போலீஸார் கடந்த ஓர் ஆண்டாக மகாராஷ்டிரா, டெல்லி, இமாசலப் பிரதேசத்தில் பல முறை முயற்சி செய்து தோல்வியை சந்தித்த நிலையில் அப்போது கைது செய்யப்பட்டான்.


இவனது முக்கிய தொழிலே இந்தோனேசியாவில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்கு கொட்டை பாக்கை கடத்தி வருவதாகும். கைது செய்யப்பட்ட சிங்கிடமும், அவனது கூட்டாளிகள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தியத்தைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நாக்பூர், மும்பையில் இரண்டு நாள்கள் பாக்கு வியாபாரிகளின் குடோன்கள், வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.


இச்சோதனையில் 289 மெட்ரிக் டன் கொட்டை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.5 கோடியாகும். நாக்பூர் வியாபாரிகள் சிலர் அரசு அதிகாரிகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு இந்தோனேசியாவில் இருந்து கொட்டை பாக்கை இறக்குமதி செய்து வந்தனர். அவற்றை நாக்பூர், மும்பை மற்றும் மத்திய இந்தியா பகுதியில் விற்பனைக்கு அனுப்பியுள்ளது விசாரனையில் தெரிய வந்தது.


இந்நிலையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் கடத்தல் தளத்தை அங்கிருந்து மாற்றி தற்போது தூத்துக்குடியை குறிவைத்து கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். இது தொடர்ந்து கடத்தல் சரக்குகள் பிடிபடுவது மூலம் தெரிய வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


மத்திய சுங்கத் துறையிடம் உள்ள தரவுகளின்படி, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுமார் ₹70 கோடி மதிப்பிலான 2,190 மெட்ரிக் டன் கடத்தல் கொட்டை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியாவில் இருந்து கொட்டை பாக்குகளை நாக்பூர் வியாபாரிகள் இறக்குமதி செய்கின்றனர். இதற்கு அதிகாரிகள் சிலரும் துணைபோவதாகக் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ நாக்பூரில் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்தோனேசியாவில் இருந்து தொடர்ந்து கொட்டை பாக்கு இந்தியாவுக்குள் வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த வருட தொடக்கத்திலிருந்து நேற்று வரை கல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் சுமார் 1400 டன் கடத்தல் கொட்டை பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கடத்தலில் அதிகாரிகள், கமிஷன் ஏஜென்டுகள், சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post Next Post