பக்கத்து வீட்டில் புகுந்து தங்க நகைகளை திருடிய கணவன் மனைவி கைது - 27 பவுன் தங்க நகைகள் மீட்பு
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் திருமணி (65) என்பவர் கடந்த 26.07.2023 அன்று தனது வீட்டு சாவியை பக்கத்து வீட்டுக்காரரான அதே பகுதியை சேர்ந்த பில்லாயூஸ் மகன் ஜெய்ஸ் (34) என்பவரிடம் கொடுத்துவிட்டு, தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார். மீண்டும் நேற்று (01.11.2023) திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டில் பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து திருமணி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், திருமணியின் பக்கத்து வீட்டுக்காரரான ஜெய்ஸ் என்பவர் தனது மனைவி ஆஷா (28) என்பவருடன் சேர்ந்து திருமணியின் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஜெய்ஸ் மற்றும் அவரது மனைவி ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 7,80,000/- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.