2023- தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு மற்றும் பலகாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்களின் எச்சரிக்கை
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர்களின் ஆணையின்படியும், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படியும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் பலகார சீட்டு நடத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்ற பின்னரே உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பின்போது தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சுகாதாரமானமுறையில் நல்ல தயாரிப்பு முறையினை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் உணவுப்பொருட்களை தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படப் பொருள்களையோ, தரம் குறைந்த எண்ணெய் , நெய், டால்டா, மற்றும் தரம்குறைந்த மூலப்பொருள்களையோ பயன்படுத்தக்கூடாது. பலகாரங்களில் கூடுதல் வண்ணம் சேர்க்கும்பொருட்டு அளவுக்கு அதிகமாக நிறமிகளை சேர்க்கக்கூடாது. அப்படி கூடுதல் நிறமிகளையோ செயற்கை வண்ணங்களையோ சேர்த்துள்ளது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு துறையினரால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொட்டலமிட பயன்படுத்த வேண்டாம் என உணவு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் தேவையான பை மற்றும் பாத்திரங்களை கொண்டுவந்து இனிப்பு மற்றும் பலகாரங்களை வாங்கிச் செல்லுமாறும், பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்படி பண்டிகை கால இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.ஜெ. தங்கவிக்னேஷ் அவர்களுக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப தெரிவித்துள்ளார். .,