அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த போதிலும், மலேசியாவுக்கு 17 கோடி கிலோ அரிசி ஏற்றுமதி - இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மலேசிய அமைச்சர்.!


 அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த போதிலும், மலேசியாவுக்கு 17 கோடி கிலோ அரிசி ஏற்றுமதி - இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மலேசிய அமைச்சர்.!


தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அப்துல் காதிர் நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.


தன் பயணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அப்துல் காதிர் நேற்று கூறியுள்ளதாவது:


இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான நல்லுறவு உள்ளது. கடந்த, 2011ல் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.


தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, மேலும் பல துறைகளையும் இணைந்து, இந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


மின்னணு, செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகள் இதில் இணைக்கப்பட உள்ளன.


இதைத் தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அந்தந்த நாட்டின் பணத்தின் அடிப்படையில் மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சு துவங்கியுள்ளது.


இஸ்லாமிய மதத் தலைவர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, உரிய முறையில் கவனம் செலுத்தப்படும். தனிநபர் குறித்து அல்லாமல், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தே இந்தியாவுடன் பேசி வருகிறோம்.


அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த போதிலும், எங்களுடைய கோரிக்கையை ஏற்று, 17 கோடி கிலோ அரிசி அனுப்பியுள்ளதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


தென் சீன கடல் பகுதியில், தன் ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது. யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுவதை இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விரும்பவில்லை என அவர் கூறினார்.

Previous Post Next Post