வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிச.16ம் தேதி முதல் தமிழ் நாட்டில் இயக்க தடை.! - போக்குவரத்து துறை அறிவிப்பு.!


 வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிச.16ம் தேதி முதல் தமிழ் நாட்டில் இயக்க தடை.! - போக்குவரத்து துறை அறிவிப்பு.!


பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு வரும் டிச.16ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்க அனுமதியில்லை’’ என தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் சுற்றுலா வாகனங்களாக பதிவு செய்யப்பட்டு சுற்றுலா அல்லாத பயணிகளை ஏற்றிக்கொண்டு இயங்கி வருவது குறித்தும், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை 17,825 ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொண்டதில், 2502 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு ரூ.72,53,870 அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.39,92,516 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 125 ஆம்னி பேருந்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முடக்கம் செய்யப்பட்ட பேருந்துகளில் 85க்கும் மேற்பட்டவை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளாகும். 


இவ்வாறு பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் இயங்கும் வாகனங்களால் பேருந்து ஒன்றிற்கு ஒரு காலாண்டிற்கு ரூ.1 லட்சத்து 8,200 வீதம் ஆண்டொன்றிற்கு ஒரு பேருந்திற்கு ரூ.4.32 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. அதனடிப்படையில், 852 வாகனங்களுக்கும் ஆண்டொன்றிற்கு தமிழ்நாடு மாநிலத்திற்கு ரூ.28.18 கோடி இழப்பு ஏற்படுகிறது.


இது தொடர்பாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்து ஆணையர் நடத்திய மூன்று கட்ட ஆலோசனையின்படி, நவம்பர் 30 தேதிக்குள் அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. நேற்று மீண்டும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 


அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளும் டிசம்பர் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முடிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், எந்த காரணத்தாலும், டிசம்பர் 16ம் தேதிக்கு பிறகு பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post