தி.மு.க. ஆட்சியில் 127 பசுமடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.24.08 கோடி செலவில் பணிகள் - அமைச்சர் சேகர் பாபு தகவல்.!


 தி.மு.க. ஆட்சியில் 127 பசுமடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.24.08 கோடி செலவில் பணிகள் - அமைச்சர் சேகர் பாபு தகவல்.!


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் 123 திருக்கோயில்களில் இருக்கின்ற 127 பசுமடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.24.08 கோடி செலவில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம் மற்றும் பசுமடம் கட்டுவதற்கான அடிக்கல்லை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று (06.11.2023) நாட்டினர்.



பின்னர் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் பசுமடங்கள் காப்பதற்கென்று பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 123 திருக்கோயில்களில் இருக்கின்ற 127 பசுமடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.24.08 கோடி செலவில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக ஆவடிகோழிப்பதாகை, திருத்தணி, திருவனம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய 4 இடங்களில் பசுமடங்கள் அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் அருகே வெயில்காத்தான் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.94 இலட்சம் செலவில் பசுமடம் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறைவனுக்கு நிகராக வழிபாடு செய்யப்படும் திருக்கோவில் யானைகள் இறந்தபிறகு அதன் நினைவாக 10 இடங்களில் மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 1 இடம் சேர்த்து 11 இடங்களில் ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. திருச்செந்தூரில் இறைவழிபாட்டிற்காக பயனுள்ளதாக இருந்த யானைக்கு ரூ.47 இலட்சம் செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகளும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்திற்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் திராவிட மாடல் ஆட்சி கடந்த ஆண்டு செய்து கொடுத்தது. அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கந்த சஷ்டி ஆரம்பித்த பிறகு 13ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள், சூரம்சம்ஹாரம் அன்று 5 லட்சம் பக்தர்கள், திருக்கல்யாணம் அன்று 2 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழா காலங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுகின்ற நிலை இருப்பதால் 16 இடங்களில் 1250 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதிகள் செய்யப்படவுள்ளது. மேலும், 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா, 100 இடங்களில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு பணியில் 2500க்கும் மேற்பட்ட காவலர்கள், 5 இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி, ஆம்புலன்ஸ் நிற்கும் 5 இடங்களில் விழா முடியும் வரை மருத்துவ முகாம்கள், தூய்மை பணியாளர்கள் 400 பேர், கோவில் சார்ந்த பாதுகாப்பு பணியில் 180 பேர், 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்குவதற்கு 21 இடங்களில் கொட்டகை அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. 


இந்துசமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை என துறைகளும் ஒருங்கிணைந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து விழாவினை சிறப்பாக நடத்திட கடந்த வாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே கடந்த முறை போல் கந்த சஷ்டி திருவிழா சிறந்த முறையில் நடைபெறும்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் இணைந்து மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப்பணிகள் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. 2025ம் ஆண்டுக்குள் நேர்த்தியாக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அடுத்த 50 ஆண்டுகளுக்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் விளங்கும் வகையில் உயர்தரத்தில் கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தற்போது எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் 20 பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசிள் சார்பில் 18 பணிகள் வருகிற கார்த்திகை மாதத்திற்குள் துவங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு யாத்திரி நிவாளம் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 45 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்டுமான பணிகள் முடிந்த பின்பு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய கோவிலாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாபணன் மற்றும் அலுவலர்கள், கலந்துகொண்டனர்.

Previous Post Next Post