தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 102வது நிறுவன தின விழா - ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு.!


 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 

102வது நிறுவன தின விழா - ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு.!


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 102வது நிறுவன தினவிழா, தூத்துக்குடியில் நடைபெற்றது. வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் இயக்குநர் விக்ரமன் மனைவி லட்சுமி பிரபா விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரரராஜன் பங்கேற்று, சேலம் மாவட்டம் பேளூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 545வது கிளையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் பெற டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கும் புதிய தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து, மறைந்த முன்னாள் இயக்குநர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘சாமானிய மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டை கருதி இந்த வங்கியை தொலைநோக்கோடு சுயநலமில்லாமல் தொடங்கி வைத்த முன்னோர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து பாராட்டுகிறேன். அவர்கள் வழித்தோன்றல்கள் தொடர்ந்து இந்த வங்கியை சிறப்பாக நடத்த வேண்டும்.


தற்போது மொத்தம் 545 கிளைகளுடனும், 1152 ஏடிஎம் மையங்களுடனும் செயல்பட்டு வருகிறது. தினக்கூலி மற்றும் சிறு தொழில் செய்கிறவர்களுக்கு தினசரி கடன் வழங்கினால் கந்துவட்டி கொடுமையில் இருந்து சாமானிய மக்களை பாதுகாக்கலாம்’ என்றார். விழாவில் வங்கியின் இந்நாள், முன்னாள் இயக்குநர்கள், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Previous Post Next Post