*தீபாவளிக்கு முன்பு 100 நாள் வேலைக்கான முழு தொகையையும் வழங்க திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை!* தமிழ்நாட்டை எல்லா நிலைகளிலும் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த மாதத்திற்கான வரி பகிர்வு நிதியாக மொத்தம் 72961 கோடி ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. அதில் பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு 13088 கோடியும், இதர பாஜக மாநிலங்களுக்கு அதிக தொகையும், தமிழகத்திற்கு சொற்பத்தொகையான 2976 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத கூலித் தொகையை பிடித்தமின்றி தீபாவளி பண்டிகை முன்னிட்டு, முன்கூட்டிய வழங்கிட ஏதுவாக தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டிய எல்லா தொகையும் உடனே விடுவிக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தியும், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியும் ஒன்றிய அரசு பாரா முகமாக இருப்பது வேதனையளிப்பதோடு விவசாய தொழிலாளர்களின் கோபத்தையும் வெகுவாக தூண்டுகிறது. ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிட குழந்தைகள் புது துணி உடுத்தி மகிழ, உறவினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் முறை செய்திட 100 நாள் வேலை திட்ட விவசாய தொழிலாளர்களுக்கு, அவர்கள் செய்த வேலைக்கான கூலித் தொகையை முழுமையாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகள் தோறும், திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் மாவட்ட தலைமையுடன் சேர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.