இந்திய மீனவர்கள் கைது, இந்தியப் படைகள் உடனடியாக
மாலத்தீவை விட்டு வெளியேற வலியுறுத்தல் - மோசமடையும் இந்தியா - மாலத்தீவு உறவு.!
12 இந்திய மீனவர்கள் மாலத்தீவு அரசாங்கத்தால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
இந்தியப் படைகள் உடனடியாக
மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முய்ஸு, வலியுறுத்தியுள்ளது இந்தியா மற்றும் மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவில் இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. அவர் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தியா மாலத்தீவு இடையே உறவுகள் மேம்பட்டது. இந்தியாவும் மாலத்தீவுக்குப் பல உதவிகளை மேற்கொண்டது.. மேலும், இந்திய ராணுவமும் மாலத்தீவில் இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ப்ராஹிம் முகமது தோல்வியடைந்தார்.
மாலத்தீவு ஜனநாயக கட்சியின் முகமது முய்ஸு வென்று அதிபராகத் தேர்வானார். இந்த புதிய அதிபர் சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின் சமயத்திலேயே போதே முகமது முய்ஸு, மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்று கூறியே பிரச்சாரம் செய்திருந்தார். அதற்கு ஓரளவுக்கு மக்கள் ஆதரவும் கூட கிடைத்தது. இதுவே அவர் தேர்தலில் வெல்லவும் உதவியது.
இதற்கிடையே மாலத்தீவுகள் முழு சுதந்திரமாக இருக்க விரும்புவதால் இங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று புதிய அதிபர் முகமது முய்ஸு தெரிவித்துள்ளார். பிரசாரத்தின் போது இந்திய ராணுவம் மாலத்தீவில் இருக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தவர் முய்ஸு.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ்குமார், மாதேஷ்குமார், மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஆழ்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடந்த 23.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து எல்லைத் தாண்டி வந்ததாக 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்து அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதுடன் , இந்திய அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.