முடங்கும் திருப்பூர் பனியன் தொழில்... மூடப்படும் நிறுவனங்கள்... மீட்க என்ன வழி?

 பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக இருக்கிறது திருப்பூர் மாநகரம். 1925ம் ஆண்டு காதர்பேட்டையில் உள்ள நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்குவதற்கு திருப்பூரை சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் மற்றும் சத்தார் சாகிபு ஆகியோர் சென்ற போது அங்கு கையினால் சுற்றி துணி தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி வந்தார்கள். அந்த இயந்திரம் தான் திருப்பூர் பனியன் தொழிலின் அடிப்படை. அதற்கடுத்தபடியாக 1955ல் இவர்கள் 400 பேர் வேலை செய்யக் கூடிய பேபி நிட்டிங் என்கிற பெரிய பின்னலாடை நிறுவனத்தை தொடங்கினார்கள். இது தான் திருப்பூரில் பனியன் தொழில் உருவாக காரணமாக இருந்த நிறுவனம்.

அதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக திருப்பூரின் பல பகுதிகளுக்கும் தடம் பதித்த பனியன் தொழிலானது திருப்பூர் மாநகரில் விஸ்வரூபமாக வளர்ந்தது. 1980 களில்  திருப்பூரில் தயாரான பனியன் ஆடைகள் 50 கோடி ரூபாய் அளவுக்கு உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்று 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது திருப்பூரின் ஏற்றுமதி. இப்படி கோவை மாவட்டத்தில், பல்லடம் தாலுகாவில் சின்ன ஊராக இருந்த திருப்பூர், பனியன் தொழில் வளர்ச்சியாலும், அதை நம்பி வந்த மக்கள் குடியேற்றத்தாலும், திருப்பூர் மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் ஆகி இருக்கிறது. 

இன்றைய நிலைக்கு திருப்பூர் மாநகரில் வசிக்கும் மக்களில் சுமாராக 6 லட்சம் பேர் பனியன் தொழிலை நம்பி இருக்கிறார்கள். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தொழில் தேடி வருபவர்கள் எண்ணிக்கையும் இங்கு அதிகம். கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் பனியன் தொழிலாளியாக வேலை செய்வதற்கு திருப்பூர் மாநகருக்கு வந்து விட்டு, இன்றைக்கு திருப்பூரில் பனியன் நிறுவன முதலாளியாக, சொந்த வீட்டுக்காரர்களாக மாறி வசிப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

 இவ்வாறாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன. அந்தளவுக்கு திருப்பூரின் பனியன் தொழில் மக்களின் வாழ்வை வளமாக்கியது என்றே சொல்லலாம்.

பல்வேறு ஊர்களில் பல தொழில்கள் இருக்கும், ஆனால் திருப்பூரில் பனியன் உற்பத்தி, ஏற்றுமதி தொழில்கள் தான் இருக்கின்றது. அது சார்ந்த சார்பு தொழில்களான சாயமிடும் டையிங் தொழில், பிரிண்டிங் தொழில், எம்ப்ராய்டரி தொழில், ஸ்டீமிங், காம்பாக்டிங் உள்பட இங்கு உள்ள 95 சதவீத தொழில் நிறுவனங்கள் பனியன் உற்பத்தி சார்ந்தவை மட்டும் தான், இப்படி ஒரே ஊரில் பனியன் உற்பத்தி சார்ந்த தொழில்கள் குவிந்து கிடப்பது இந்த தொழில் இங்கு பெரிய அளவில் வளர சாதகமான அம்சமாக இருந்தது. தொழிலும் பெருமளவு வளர்ந்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் திருப்பூரின் பனியன் தொழிலுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. கொரோனாவுக்கு பின்னர் கஷ்டப்பட்டு மீண்டு வந்த பனியன் தொழில் நூல் விலை உயர்வால் திக்கி திணறியது. மேற்கத்திய நாடுகளில் திருப்பூர் பனியன் சார்ந்த தயாரிப்புகளுக்கு கிடைக்கிற விலையை விட, பனியனை தயாரிக்க ஆகிற நூல் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் திருப்பூரின் பனியன் உற்பத்தி கடந்த 2022ம் ஆண்டில் பெரும் சிக்கலுக்கு ஆளானது. ஆனாலும் உலகளவில் கிடைத்த ஆர்டர்கள் காரணமாக ஓரளவு தொழில் நடந்து கொண்டு இருந்தது. 2022 ம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திருப்பூரின் ஏற்றுமதி இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரின் பனியன் ஏற்றுமதி அளவானது சராசரியாக 15 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்.

ஆனால் இந்த ஆண்டில் திருப்பூர் மாநகரின் பனியன் தொழிலுக்கு மிகப்பெரிய போதாத காலம் தொடங்கி இருக்கிறது. உலக அளவில் ஏற்ப்பட்டுள்ள உக்ரைன், ரஷ்ய போர்கள், இஸ்ரேலிய பாலஸ்தீனிய பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் மேற்கத்திய நாடுகளில் ஆடை வாங்குவோரிடம் வாங்கும் சக்தி குறைந்திருப்பது, திருப்பூர் மக்களின் பனியன் ஏற்றுமதியில் பெரிய முட்டுக்கட்டையை போட்டு முடக்கி உள்ளது. வழக்கமாகவே இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாட்டவர்கள் அதிகளவு புதிய ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆடைகள் வாங்குகிறார்களோ அந்தளவுக்கு திருப்பூர் மாதிரியான உற்பத்தி செய்யும் பகுதிகளில் உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஆனால் உக்ரைன், ரஷ்ய போர்கள், இஸ்ரேலிய பாலஸ்தீனிய பதட்டம் உள்ளிட்ட காரணங்களால், மேற்கத்திய நாடுகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டுள்ளனர். புதிய ஆடைகளுக்கு பதில் பழைய ஆடைகளையே பயன்படுத்துகின்றனர். இது திருப்பூரின் வர்த்தகத்தில் பேரிடியை இறக்கி உள்ளது. பின்னலாடைகள் வாங்குவதற்கான வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்காததால்,  திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் சிக்கலுக்கு ஆளாகி உள்ளன. திருப்பூரின் பனியன் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாக திருப்பூரின் தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கிறார்கள்.


இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், ‘ உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களாலும் மேற்கத்திய நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள மந்த நிலை காரணமாகவும் திருப்பூரின் ஏற்றுமதி வெகுவாக குறைந்திருக்கிறது. இஸ்ரேலிய, பாலஸ்தீனிய போரும் அங்கு பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இதனால் ஆடை உற்பத்தி பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது.  40 சதவீத அளவு ஏற்றுமதி குறைந்திருப்பதால் தொழில் முனைவோர் திணறுகிறார்கள். பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகள் நம்மை விட குறைந்த விலையில் பனியன் சார்ந்த பொருட்களை தருவதால், மேற்கத்திய நாடுகளின் வர்த்தகர்கள் அங்கு செல்கிறார்கள். இதனால் நமது உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறோம். சிறு குறு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். மின்கட்டண உயர்வு, டிமாண்ட் சார்ஜ் போன்றவையாலும் தொழில் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. வாழ்நாளில் காண இயலாத அளவுக்கு பெரும் மாற்றங்களை பார்க்கிறோம். கொரோனா காலத்தை காட்டிலும் அதிக பாதிப்பை திருப்பூர் தொழில் துறையினர் சந்திக்கிறோம். பனியன் ஆர்டர்கள் இல்லை என்றாலும், செலவினங்கள் குறையவில்லை. சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்று உள்ளன. இந்த சிரமமான காலகட்டத்தில் கடன் அவகாசம் ஏற்படுத்தி தர வேண்டும். மின்கட்டண உயர்வினையும் குறைக்க வேண்டும்.என்றார். 

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ‘பின்னலாடை தொழில் திருப்பூரில் பெரும் அளவு நலிந்து உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. நமக்கு பனியன் தொழிலில் போட்டி நாடான பங்களாதேஷில் நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள். நம் நாட்டில் ஜவுளி தொழிலுக்கு தனி சலுகைகள் இல்லை. விவசாயத்துக்கு அடுத்தபடியாக இருக்கக் கூடிய ஜவுளித்தொழிலுக்கு தனியாக அமைச்சர் இல்லை. திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை இரண்டுமே குறைந்து விட்டது. பங்களாதேஷின் குறைந்த விலை என்பது நமக்கு பெரும் போட்டியாக இருக்கிறது. இதனால் திருப்பூர் தொழில் முனைவோர் தொழிலை விட்டே செல்லும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. மாநில அரசை பொறுத்தவரை தொழிலுக்கான உயர்த்தப்பட்ட மின்கட்டணம் பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. 2023ல் பின்னலாடை ஏற்றுமதி 50 சதவீத அளவுக்கு குறைந்து உள்ளது. இதற்கு காரணம் வெளிநாடுகளுடன் போட்டி போட இயலாத நிலையுடன் உள்நாட்டு செலவு காரணிகளும் ஆகும். சிறு குறு தொழில் நிறுவனங்கள் 70 சதவீத அளவுக்கு மூடி உள்ளார்கள். இதை சரி செய்ய மத்திய அரசு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். திருப்பூருக்கு மாற்றுத்தொழில் என்று ஒன்று கிடையாது. இந்த ஊர் பின்னலாடை தொழிலை மட்டுமே நம்பி உள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தை சரி செய்ய வேண்டும். அரசிடம் தொடர்பில் உள்ள திருப்பூர் அமைப்புகள் சரியான தகவல்களை அரசுக்கு கொடுக்காததால் அரசுகள் திருப்பூர் தொழில் நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை அப்படியல்ல. சிறு குறு தொழில் பெரிய அளவில் அழிவை சந்தித்து வருகிறது. அரசுக்கு அமைப்புகள் தவறாக வழிகாட்டக் கூடாது. உண்மையான தொழில் நிலையை சொல்லி தொழில் துறையினருக்கு உரிய உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும். என்றார். 

பனியன் தொழில் நிறுவன உரிமையாளர் அங்கமுத்து என்பவர் கூறுகையில், ‘  கடந்த 30 ஆண்டுகளில் திருப்பூரில் தொழிலாளியாக வந்த பலரும் இன்று முதலாளியாக உருவாக்கிய ஊர் இது. சினிமாவில் பார்ப்பது போல இங்கு தொழில் வளர்ச்சியால் மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் கண்டது. ஆனால் இப்போது ஆர்டர்கள் இல்லை. வரலாறு காணாத அளவில் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சிறு குறு நிறுவனங்கள் பெரும்பாலும் பூட்டி விட்டார்கள். பெரிய நிறுவனங்கள் குறைந்த லாபத்துக்கு தொழில் நடத்துகிறார்கள். இந்த தொழிலை சிரமத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். பனியன் தொழிலுக்கு சலுகைகளை தர அரசுகள் முன்வரவேண்டும். என்றார்.

திருப்பூரின் ஏற்றுமதி வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் பூட்டப்படுவதாக தொழில் அமைப்பினை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. பின்னலாடை தொழில் முடக்கம், சிக்கலால் திருப்பூரில் உள்ள சிறு கடைகள் உள்பட மற்ற நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மத்திய அரசு இந்த தொழிலை மீட்க அவசரகதியாக திட்டங்களை உருவாக்கிட வேண்டும். மாநில அரசும் மின் கட்டணம் உள்ளிட்ட விஷயங்களில் தொழில் துறையினருக்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் திருப்பூரின் பனியன் தொழிலை மீட்டெடுப்பது இயலாத காரியமாகி விடும் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.  

Previous Post Next Post