*மயிலாடுதுறை சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை நகரில் சுற்றித் திரியும் மாடு, குதிரை மற்றும் கால்நடைகளை பிடிக்க நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகரில் கூறைநாடு,பூக்கடைத்தெரு முதல் காவிரி நகர் வரை 50க்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்கும் இரவு முழுவதும் அலைக்கின்றன. அதேபோல மகாதான தெரு, திரு வி.க.காய்கறி மார்க்கெட் பகுதி, பட்டமங்கல தெரு பெரிய கடை தெரு,கேணிக்கரை திருவாரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அலைவதால் பெரும் சிரமம் பொது மக்களுக்கும், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுகின்றது. மேலும் நடந்து செல்பவர்கள் மிகுந்த பயத்துடன் ஒதுங்க கூட இடமில்லாமல் தவிப்பதை காண முடிகிறது. சென்னையில் மாடு முட்டி பள்ளி மாணவியும், முதியவரும் படுகாயம் அடைந்த பதபதைக்க வைக்கும் சம்பவங்கள் மயிலாடுதுறையிலும் நிகழாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக மாடுகளைப் பிடித்து அகற்றுவது மட்டுமே ஒரே வழியாகும். சாலையில் விபத்துகளை ஏற்படுத்துகின்ற கால்நடைகளை அகற்றுவதில் இன்னமும் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமலும், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூட சாலையில் திரியும் மாடுகளை அகற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டும், பலமுறை சொல்லியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக மயிலாடுதுறை நகர் முழுவதும் சுற்றி த்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தோ அல்லது கோசாலைகளுக்கு அனுப்பியோ இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக கடைவீதிகளுக்கு வருகின்ற பொது மக்கள் எவ்வித அச்சமும் இன்றி சாலைகளில் சென்றுவர உதவிட வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரை மீண்டும் மீண்டும் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.