*மயிலாடுதுறை கூறைநாடு குமரன் பூங்காவை பராமரிக்கவும், குடிகாரர்கள் வருகையை தடுக்கவும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை நகரத்தில் வரதாச்சாரியார் பூங்கா, காந்தி நகர் பூங்கா, பெசன்ட் நகர் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் கூட நகரின் மையப் பகுதியில் கூறை நாடு திருப்பூர் குமரன் பூங்கா, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காவாக அமைந்துள்ளது. இப்பூங்கவைச் சுற்றிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட தெருக்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான குடியிருப்பு வாசிகள் தினமும் காலை, மாலை வேலைகளில் சிறப்பாக பயன்படுத்தி வந்தனர். இப்பூங்காவை நகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சங்கள் செலவிடப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மரங்கள், பூச் செடிகள். அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கான ஏற்பாடுகள், காற்றோட்டமாக கூடி மகிழ குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என்று அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன. மேலும் 2004 ஆம் ஆண்டு அன்றைய சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதியவர்கள் மற்றும் பெண்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிறு நூலகம் ஒன்றும் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இ பூங்காவை பொதுமக்கள் பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் பயன்படுத்துவதைவிட அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் அங்கே செல்கின்றவர்களை முகம் சுளிக்க வைப்பதுடன். கொஞ்சம் கொஞ்சமாக நடைப்பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து விட்டது. மேலும் குப்பை கூலங்கள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், புல் புதர் செடிகள் மண்டி கிடப்பது அதற்கு சாட்சியாகும். மக்கள் வருகை குறைந்து குடிகாரர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குமரன் பூங்காவை உடனே பராமரிப்பதுடன் உள்ளே உள்ள மது பாட்டில்கள் குப்பைகளை அகற்றி, நேர மேலாண்மை அறிவிப்பு செய்து நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். நகராட்சியின் பயன்படாத குப்பை அள்ளும் வாகனத்தையும் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் பூங்காவை பராமரிக்க மற்றும் பாதுகாக்க தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், காவல்துறையின் தொடர் கண்காணிப்பும் இப்பூங்கா மீது இருக்க வேண்டும் என்றும் தியாகி திருப்பூர் குமரனின் 120வது பிறந்த நாளான அக்டோபர் 4ல் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.