*ஆம்னி பேருந்துக்கு கடிவாளம் மிகவும் அவசியம் !* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!!* பொதுமக்களின் தேவைக்காக அரசு பேருந்துகளோடு, தனியார் ஆம்னி பேருந்துகளும் பெருமளவு இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பேருந்துகளில் உள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நாட்களில் இப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்கின்ற பொழுது அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் தூய்மையாகவும், துரிதமாகவும், உரிய நேரத்திலும், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போய் சேர முடிகின்றது என்கின்ற காரணத்தினால்கட்டணம் கூடுதலாக இருந்தாலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாகப் பயணிக்கின்றார்கள். அதே தனியார் பேருந்து பண்டிகை காலங்களில் பல மடங்கு அதிகம் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு பெரும் பொருளாதார கஷ்டத்தையும், மன அழுத்தத்தையும் தருகின்றது.அதனால்தான் கூடுதல் கட்டணம் வாங்குகின்ற ஆம்னி பேருந்துகள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் தமிழகம் முழுதும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பர்மிட் இல்லாமல் இயக்கியது, வெளிமாநில எண் கொண்டவை,இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கியது, கூடுதலாக கட்டணம் வசூலித்தல் போன்ற தவறிழைத்தமைக்காக அதன் இயக்கம் தடை செய்யப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்துகள் சங்கம் என்னும் பெயரில், சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தனியார் பேருந்துகளே ஓடாது என்றும் அரசையே மிரட்டுகின்ற செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது எந்த விதத்திலும் நியாயமே கிடையாது.தவறுகள் செய்பவர்களுக்கு சங்கம் துணைபோவது என்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் அரசின் நடவடிக்கைகள் மூலம் சிறைபிடிக்கப்பட்டது மிகவும் சரியானது. ஆனால் அதே சமயம் ஆம்னி பேருந்து சங்கத்தினர் விட்ட மிரட்டலுக்கு பயந்து நடவடிக்கை எடுக்காமல் விடுவித்த அரசின் செயல் என்பது மிகமிக தவறானது. உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது போல கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது மிகமிக அவசியமாகும். அப்போது தான் மீண்டும் தவறிழைக்க மாட்டார்கள். அரசும் அலட்சியமாக இல்லாமல் இனிவரும் காலங்களில் உரிய கட்டணத்தை ஆம்னி பேருந்துகளுக்கும் நிர்ணயம் செய்வதோடு, அதில் எவ்விதத்திலும் சமரசம் செய்யாமல் நடவடிக்கைகள் பாய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகும். பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் செய்தாலும் அதனை சமாளிக்கின்ற அளவிற்கு அரசு தன்னுடைய போக்குவரத்து துறையை மேம்படுத்தி சீரமைக்க வேண்டும். எந்த துறையிலும் தவறிழைத்தவர்கள் மிரட்டினால் பணிவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல.ஏனெனில் அனைத்து துறை மக்களுக்கு அவசியமாகும். அதேபோல தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசின் சார்பில் விதிக்கப்படுகின்ற வரி, பர்மிட், தகுதிச்சான்று போன்ற கட்டணங்களையும் கனிசமாக குறைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும், தொழிலாளர்கள் குடும்பத்தினரும் வாழ்வதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டியதும் அரசின் கடமையாகும். எது எப்படியோ இறுதியாக மக்களின் தலையில் பெரும் பொருளாதார கஷ்டத்தை பாராங்கள் போல் வைக்காமல் இருக்கும் நிலை வேண்டும். ஆம்னி பேருந்துகளும் அரசும் தொடர்ந்து பாரம்ஏற்றாமல் இருப்பதே ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நீங்கள் செய்யும் பிரதி உபகாரமாகும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.