ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, காசா மீது ஒரே வாரத்தில் வீசிய இஸ்ரேல்.! - இஸ்ரேல் போரை நிறுத்த ஐநா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!


 ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, காசா மீது ஒரே வாரத்தில் வீசிய இஸ்ரேல்.! - இஸ்ரேல் போரை நிறுத்த ஐநா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்! 


நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் ஐநாவில் நிறைவேறியுள்ளது.


கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து  இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி காசாவில் உள்ள  2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேரை இரக்கமின்றி கொன்று குவித்துள்ளது. 

18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.


பொதுமக்கள் மட்டுமல்லாது ஐநாவின் செயற்பாட்டாளர்கள் 35 பேரும், பத்திரிகையாளர்கள் 32 பேரும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகியுள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா, சீனா, அரபு நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் மேற்கொண்ட முயற்சிகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று தொடங்கிய ஐநா பொதுக்குழு கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் மூன்றில் 2 பங்கு உறுப்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


ஐநா பொது சபையின் 10வது அவசரகால சிறப்பு அமர்வு நேற்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் வரை தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், "காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுப்பட வேண்டும். காசா மக்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.


இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. அதேபோல இந்த தீர்மானமத்தில், ஹமாஸ் தாக்குதலை கண்டிக்க வேண்டும் என கனடா ஒரு திருத்தத்தை முன்மொழிந்தது. இந்த திருத்தமும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது 3ல் 2 பங்கு வாக்குகளை பெற தவறியது. எனவே திருத்தம் தோல்வியடைந்தது. என்னதான் ஐநா பொதுக்குழுவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதில்லை. மாறாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் தீர்மானத்தையே மிக முக்கியமானதாக கருதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post