தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் துணை கேள்வி நேரத்தின்போது கீழ்க்கண்ட தொகுதி சார்ந்த கோரிக்கையை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசியதாவது:
"மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே!
மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடியில் தாலுக்கா மருத்துவமனையாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளது. மொத்தம் ஆறு பொது மருத்துவர்கள், ஒரு பல் மருத்துவர், ஒரு சித்தா மருத்துவர் உட்பட எட்டு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு அடிக்கடி பணி மாறுதல் கொடுக்கப்படுவதால் அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட முடிவதில்லை, எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எக்ஸ்ரே எடுக்கும் வசதி எக்ஸ்ரே மெஷின் கிடையாது என்றும் இதனால் ஏழை நோயாளிகள் வெளியில் காசு கொடுத்து எக்ஸ்ரே எடுத்து வரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றும் ஆய்வகங்களில் உள்ள மெஷின்கள் மற்றும் உபகரணங்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. மிஷின்கள் இயங்குவதில்லை. அதே போல் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க முடிவதில்லை. இதனால் மக்கள் கரூர் மற்றும் ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேன் மெஷின் இங்கு இயங்குவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்று பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்து வரும் நிலை உள்ளது.
மேலும் இங்கே பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அடையாளம் தெரியாதவர் பிரேதங்களை பரிசோதனை
செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி கொண்ட பிரீசர் பாக்ஸ் இந்த மருத்துவமனையில் இல்லாமல் ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்வது அவர்களுக்கான சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் இல்லாமல் இருப்பதும் பொதுமக்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. எனவே மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு முன்வருமா என்பதை மாண்புமிகு பேரவை தலைவர் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்."என்ற சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
TAMILANJAL REPORTER : BOOBALAN