கொடிக்கம்பம் மோதல் விவகாரம் - பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது..

 

கொடிக்கம்பம் மோதல் விவகாரம் - பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது..


தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.


மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும்,பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் சிலரை போலீசார் வேனில் ஏற்றி அருகிலுள்ள மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனந்த்தை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கே சென்று போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post