திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று காலை அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு கட்சியின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு 52 அடி உயரக் கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., புறநகர் கிழக்கு மாவட்ட செயளாலர் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், நகர செயலாளர் வெங்கு மனிமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது கூறியதாவது: விடியா அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதி நெசவு வேளாண் தொழில் அதிகம். இந்த தொழில் செய்பவர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் ஏற்றி கொடுக்கபட்டது. மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது.ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
திமுக 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாமல் அவதியுறுகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது. நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் விவசாயிகள் மகிச்சியாக இருந்தனர். ஆனால் விவசாயம் , நெசவு அழிந்து விட்டது. எனவே இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். விடியா அரசை வீட்டுக்குஅனுப்ப அடித்தளம் இடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.