தூத்துக்குடி : ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.!
தூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை
கனிமொழி எம்.பி திறந்து வைத்தார், நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், புல்தோட்டம் மற்றும் சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பேசுகையில், 'உள்விளையாட்டரங்கம் சிறப்பாக அமைத்து கொடுத்துள்ள மாநகராட்சிக்கும், மேயருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாவட்டமாக இருந்து வருகிறது. உதாரணமாக, கபடி போட்டி, ஹாக்கி போட்டிகளில் உலக அளவில் நமது வீரர்கள் தேர்ச்சிப் பெற்று வருகின்றனர். மாநகர மக்களின் வசதிக்காகவும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு 500 மாத கட்டணம் என்று நிர்ணயம் செய்தாலும் செலுத்த முடியாமல் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு மாநகராட்சி அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். உலக அளவில் நமது திறமைகளை விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று மனதார பாராட்டுகிறேன், இவ்வாறு பேசினார்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: 'மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க அண்டை நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரிக்டா, எடின்டா, மும்தாஜ், வைதேகி, சுப்புலெட்சுமி, பவானி மார்ஷல், இசக்கிராஜா, விஜயலெட்சுமி, மகேஸ்வரி, சந்திரபோஸ், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, வட்ட செயலாளர் சதீஷ்குமார், வட்ட பிரதிநிதி துரை, மற்றும் கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, பேச்சிமுத்து, அல்பர்ட், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துகுமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.