திருப்பரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமத்தொகை பணம் ரூ.1000 ஐ வங்கி மூலம் நேர்டியாக வழங்காமல் தனியார் மையங்களுக்கு பெண்களை அனுப்பி ஒவ்வொருவரிடமும் ரூ.50 பறிப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மாதமாக இந்த மாதமும் பயனாளிகள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த நிலையில், அதை எடுக்க வங்கி ஊழியர்கள் மறுத்ததுடன், தனியார் செல்போன் கடைகளுக்கு அனுப்பியதாகவும், அங்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், பெண்களுக்கு வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை எனவும், அந்த பணத்தை பெற தனியார் மையங்களுக்கு செல்ல வங்கி ஊழியர்கள் அறிவுறுத்துவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், வங்கியில் இருந்து சாதாரணமாக 1000 ரூபாய் பணம் எடுப்பதற்கு தனியார் மையங்கள் 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கும் நிலையில், இந்த வங்கி ஊழியர்கள் தனியார் மையங்களை 50 ரூபாய் வசூலிக்க கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், இதில் வங்கி ஊழியர்களுக்கும் பணம் செல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முழுமையாக இல்லாமல் இதில் 50 ரூபாய் தனியார் மையங்கள் மூலம் பணம் பறிக்கப்படும் சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், ‘ கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பணம் எடுக்க பெண்களை அலைக்கழிக்கிறார்கள். பணம் தர முடியாது என்று கூறி தனியார் மையங்களில் எடுத்துக் கொள்ள சொல்லி டோக்கன் வழங்குகிறார்கள். இதன் மூலம் தனியார் மையத்தினர் பணம் எடுத்து தருவதற்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். சாதாரணமாக 1000 ரூபாய் பணம் எடுப்பதற்கு 20 ரூபாய் வசூலிக்கும் நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட இந்த மையங்கள் 50 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையானது முழுமையாக பெண்களுக்கு சென்று சேர வேண்டும் என்று தான் கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கணக்கு தொடங்கிட முதல்வர் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த வங்கியில் தனியார் செல்போன் கடைகள், பணம் எடுக்கும் இண்டர்நெட் மையங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு 50 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள்.
இந்த பணம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த விஷயம் குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.