காசாவில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் குடிநீர் விநியோகம் - இறங்கி வந்த இஸ்ரேல்.!



 காசாவில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் குடிநீர் விநியோகம் - இறங்கி வந்த இஸ்ரேல்.! 


இஸ்ரேல் - காசா போர் 9 ஆவது நாளாக தொடரும் நிலையில், வான்வழித்தாக்குதல்களால் காசா கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ளது. காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல்களை நிகழ்த்தி வருவதால், மருத்துவமனைகள் படுகாயமடைந்தவர்களால் நிரம்பியது. இதில் பெரும்பாலானோர், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதால் இது உலக நாடுகள் மத்தியில் கடும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


திரும்பிய பக்கமெல்லாம் ஏவுகணைகளால் தகர்ந்த கட்டிடங்கள் குவியலாக உள்ள நிலையில், அதில் சிக்கியவர்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இறந்த உடல்களை வைக்க இடம் இல்லாத காரணத்தால், ஐஸ்கிரீம் வண்டிகளில் சேமிக்கும் அவல நிலை உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், எகிப்தை தொடர்ந்து காசாவுக்கு ஈரானில் இருந்தும் மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மற்றொரு புறம், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்கள் தாங்கிய 2வது கப்பல் இஸ்ரேல் வந்தடைந்தது.


இஸ்ரேல் - காசா போரில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 3,600-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், காசாவில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்ததாகவும், 9,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது.


ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசாவுக்கான எரிபொருள், மின்சாரம், தண்ணீர், இணையதளம் என அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் நிறுத்தியது. இதனால், இன்றுடன் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிடும் என மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே போரினால் நூற்றுக்கணக்கானேர் செத்து மடியும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, 5 நாட்களுக்குப் பின் காசாவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது. போர் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இன்றி பரிதவிக்கும் காசா மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைத்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

Previous Post Next Post