தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 10 டன் கசகசா கடத்தல்.! -
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை.!
தூத்துக்குடிக்கு மலேசியாவில் இருந்து வந்த கண்டெய்னர் பெட்டியில் தவிடு என்ற பெயரில் மறைத்து எடுத்து வந்த 2.25 கோடி மதிப்புள்ள 10 டன் கசகசாவை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் கசகசா விதைகள் தடைசெய்யப்படவில்லை என்றாலும், அவற்றைக் கையாளுவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை போதைப் பொருளாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் இவற்றை இறக்குமதி செய்ய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஆணையரிடம் தடையில்லா சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும்.
இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து வந்த கண்டெய்னர் பெட்டியில் தவிடு என்ற பெயரில் கசகசாவை மறைத்து எடுத்து கடத்தப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துறைமுக சாலையில் உள்ள தனியார் கண்டெய்னர் முனையத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு கண்டெய்னரில் முன் பக்கம் 9 டன் தவிடு மூடைகள் அடுக்கப்பட்டு இருந்ததை இறக்கி சோதனையிட்ட போது அதன் பின்பக்கம் 10 டன் அளவுள்ள கசகசாவை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் நபரை தேடி வருகின்றனர்.
இதன் மதிப்பு ரூ.2.25 கோடி என கூறப்படுகிறது.
தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.