தூத்துக்குடியில் உரிமமின்றி இயங்கிய மாட்டிறைச்சிக் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு சுகாதரமற்ற நிலையில் இருந்த 150 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சுகாதாரத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இம்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டுவருகின்றது.
அதன் தொடர்ச்சியில், திடீர் ஆய்வின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் .ச.மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி மாநகராட்சி ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள ஆர்.சி.ஜே இறைச்சிக் கடையை ஆய்வு செய்தபொழுது, அக்கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டது.
மேலும், ஞாயிறன்று அறுத்த சுமார் 100 கிலோ மாட்டிறைச்சி எழும்புகளை உறைய வைத்து, உறைபனி பெட்டியின் வெப்பநிலை கண்காணிக்கப்படாமல் இருந்தவற்றையும், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கொழுப்பு உள்ளிட்ட சுமார் 50 கிலோ மாட்டிறைச்சிகளையும் கண்டறிந்து, பறிமுதல் செய்து, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி, /ப்னாயில் ஊற்றி, புதைத்து அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் வரை, அந்த இறைச்சிக் கடையில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவும், இறைச்சிக் கழிவு அகற்றுதலில் உள்ள சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்தும் விசாரணை செய்ய ஏதுவாக, ஆர்.சி.ஜே என்ற மாட்டிறைச்சிக் கடை மூடி முத்திரையிடப்பட்டது.
இறைச்சி வியாபாரம் செய்வோர், மாநகராட்சி/நகராட்சி/இதர உள்ளாட்சி அமைப்புகள் வரையறுத்த இடங்களில் மட்டுமே ஆடு/மாடு/பன்றி போன்றவற்றை வதம் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் காலநடைகளை வதம் செய்து, இறைச்சி விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அனுமதி இல்லை.
மேலும், மாடு அல்லது பன்றி போன்ற பெரிய விலங்குகளை வதம் செய்து, இறைச்சியாக விற்பனை செய்ய, மாநகராட்சி/நகராட்சி/இதர உள்ளாட்சி அமைப்புகள் அல்லது காவல் துறையிடமிருந்து "தடையின்மைச் சான்று” அவசியம் வேண்டும். அச்சான்று இல்லாமல் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கப்படமாட்டாது. உணவு பாதுகாப்பு உரிமமின்றி எவ்வித இறைச்சியையும் விற்க கூடாது. இதுபோல் நேற்று இரவு தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உணவு பாதுகாப்பு உரிம மில்லாமல் இயங்கிய பிரியாணி ஹோட்டல் ஒன்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சிக் கடை உள்ளிட்ட உணவு வணிக உரிமையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை: உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ இறைச்சி வணிகம் உள்ளிட்ட அனைத்து வகை உணவு வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால், உணவு பாதுகாப்புத் துறையால் உணவு வணிக நிறுவனம்/கடை மூடப்படும் என்பதுடன், ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது. நுகர்வோர்களும் இறைச்சி வாங்கும் போதும், உணவகங்களில் உணவருந்தும் போதும், கடைக்கு FSSAI உரிம எண் உள்ளதா என்பதைக் கவனித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடுகள் குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, நியமன அலுவலர்,மாரியப்பன் தெரிவித்துள்ளார்.