கொடூர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ரயில் விபத்திற்கு காரணம் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்று ரயில்வே தொழில்நுட்ப குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த கொடூர விபத்தில் 14 பேர் பலியானதாகவும் 45 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று தெரிய வருகிறது.
இந்த விபத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்த காரணத்தால் விசாகப்பட்டினத்தில் இருந்து முதலில் சென்ற ரயில் கண்டக பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதன்பின் வந்த ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறு ஆகியவற்றின் காரணமாக வழித்தடத்தின் இடையே ரயில் நிறுத்தப்பட்டால் உடனடியாக தகவல் சென்றடையும். அது பற்றிய தகவல் உடனடியாக ரயில்வே தானியங்கி தகவல் தொழில்நுட்ப முறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்துவிடும். இந்த தகவல் அடிப்படையில் அதே வழித்தடத்தில் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலின் ஓட்டுனருக்கு தகவல் அளித்து அவரை எச்சரிக்கை செய்ய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் நேற்று நடைபெற்ற விபத்தில் ஒரு ரயில் இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் அது பற்றிய தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லையா? அல்லது கிடைத்தும் பின்னால் வந்து கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயிலில் ஓட்டுநருக்கு அவர்கள் தகவலை தெரிவிக்க வில்லையா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கு காரணம் கவனக்குறைவா அல்லது சதி வேலையா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 10 மணி முதல் துவங்கி ராட்சத விளக்குகளை பொருத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு குழுவினர் தற்போது ராட்சத இயந்திரங்களை கொண்டு வந்து நசுங்கிக் கிடக்கும் ரயில் பெட்டிகளை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் .
ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் சத்யநாராயணா நேற்று இரவு முதல் விபத்து நடைபெற்ற பகுதியில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள கேஜிஎப் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாயும்,லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்டு சில மாத இடைவெளியில் மீண்டும் ஒரு கொடூர விபத்து நடந்து இருப்பது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.