கட்டணக் கொள்ளை: 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல், ரூ.15 லட்சம் அபராதம்.!- போக்குவதுத்து துறை அதிரடி.!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
நான்கு நாட்கள் விடுமுறை வருவதை அறிந்து முன்கூட்டியே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக சோதனை நடத்தி கடந்த நான்கு நாட்களில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,545 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.