திருச்செங்கோட்டில் குழந்தை கடத்தல் - 10 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திய அரசு பெண் டாக்டர் கைது.!
திருச்செங்கோட்டில் 10 க்கும் மேற்பட்ட குழந்தை விற்பனைக்கு புரோக்கரோடு துணை போன திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் டாக்டர் கரூரை சேர்ந்த பெண் புரோக்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த விசைதறி தொழிலாளி நாகஜோதி-தினேஷ் தம்பதியினர். இவர்களுக்கு சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 12ம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா கரூர்
வெங்கமேட்டை சேர்ந்த புரோக்கர் லோகாம்பாளுக்கு தகவல் கொடுத்து
இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளார். பின் நாகஜோதி-தினேஷ் தம்பதியிடம் குழந்தையை விற்று விடுமாறு டாக்டர் பேரம் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாமக்கல் கலெக்டர் உமா எஸ்.பி. ராஜேஷ்கண்ணனுக்கு புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் மருத்துவமனைக்கு சென்று நேற்று விசாரணை நடத்தினார். விசாரனையில் குழந்தையை கடத்த அரசு மருத்துவர் முயற்சி செய்தது தெரிய வரவே அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாளை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் கூறுகையில்: அரசு டாக்டர் மற்றும் பெண் புரோக்கர் கூட்டணி இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இதில்லாமல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உறுப்பு தானத்துக்கு பணம் பெற்று விற்பனை செய்து கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் குமாரபாளையம் திருச்சி தென்காசி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு புரோக்கர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது என தெரிவித்தனர்.
திருச்செங்கோடு மருத்துவமனை குழந்தை கடத்தலில் அரசு மருத்துவரே கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பெண் டாக்டர் மற்றும் புரோக்கரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.