மயிலாடுதுறை 🦚 *ஸ்ரீ மயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் காண்பீர்!🙏🏼 சகல சம்பத்துக்கள் பெறுவீர்!* அழைக்கிறார் சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம்

  மயிலாடுதுறை 🦚 *ஸ்ரீ மயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் காண்பீர்!🙏🏼 சகல சம்பத்துக்கள் பெறுவீர்!*    கட்டுரையாளர்; *அ.அப்பர்சுந்தரம்*  மயிலாடுதுறை *****--****          *.    ஊனத் திருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டிட பேணும்,       தேணொத்தினியா னமருந்சேர் வானம் மயிலாடுதுறையே !* என்னும் திருஞானசம்பந்தர் போற்றிய மயிலாடுதுறை சோழ வளநாட்டில் காவேரி கரையில் விளங்கும் அழகிய நகரங்களில் ஒன்றாகும். *ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல் ஆகுமா* என வழங்கும் பழமொழியாலும் இதன் உண்மையை அறியலாம். பழமைத் தொட்டே மாயூரம் என வழங்கி வந்து பிறகு  மயிலாடுதுறை என தற்போது அழைக்கப்படும் இவ்வூரில் உள்ள திருத்தலமானது திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள், திருநாவுக்கரசர் அருளிய ஒரு பதிகம் ஆகிய மூன்று பதிகங்களை பெற்றது. திருநாவுக்கரசர் மேலும் திருத்தாண்டக பாடல்கள் நான்கில் இத்தலத்தைப் போற்றியுள்ளார். பெரிய புராணத்தில் சேக்கிழார், ஞானசம்பந்தர் அப்பர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதை குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தளத்துக்குள்ளது.  ஸ்ரீ கிருஷ்ண ஐயர் இங்கு விளங்கும் அபயாம்பிகை மீது சதகம் பாடி யுள்ளார். இத்தலத்துக்கு ஆதியப்பனார் என்பவர் தலபுராணம், சிவஞான ஐயர் துலா காவிரி புராணம் ஆகியவற்றை இயற்றியுள்ளனர். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 64 படலங்களுடன் 1895 செய்யுட்கள் கொண்ட இத்தல புராணத்தை இயற்றியுள்ளார். வடமொழியில் பிரம்மாண்ட புராணத்தில், பிரமகைவர்த்தப் படலத்திலிருந்த மயூர மான்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துரைத்ததாக அவையடக்கத்தில் கூறுகின்றார்.// ஸ்ரீமத் முத்துக்குமார முனிவர் வேண்டுகோள் படி வடமொழியில் இருந்த மாயூர மான்மீயத்தைத் தமிழில் பாடியதாக தெரிவிக்கிறார். பெரும் புலவராயினும் அடக்கமாக தன்னைச் சொல்லிக் கொள்ளும் முறையில் மயில் செய் பூசையை ஏற்ற மயூரநாதர் காகபூசையையும் ஏற்றது போல என் செய்யுளையும் ஏற்பார் என்றும், பாலில் கலந்த தண்ணீரும் பாலாக மதிக்கப்படுவது போல மாயூர மான்மீயச் சிறப்பால் என் செய்யுளும் ஏற்கப்படும் எனவும் கூறுகிறார்.               .                      ஆறுகளின் கறைகளில் விளங்கும் தலங்கள் பலவும் துறை  என முடியும் பெயர்களைக் கொண்டு விளங்கி வரும் முறையில் தான் இத்தலம் மயிலாடுதுறை என பெயர் பெற்றது.        அம்பிகை மயிலுருவாய் பூசித்த சிறப்புடைய தலங்கள் மயிலாடுதுறையும் சென்னையில் உள்ள மயிலாப்பூரும் ஆகும். மயிலாடுதுறை சோழ நாட்டில் விளங்குவது என்பது  பூக்களில் தாமரை, புருஷர்களில் திருமால், சோலைகளில் கற்பகம், கலைகளில் ஞானம்,    பசுக்களில்  காரன் பசு, அறங்களில் இல்லறம், நாக்குகளில் உண்மை பேசும் நா சிறப்புறுதல் போல நாடுகளில் சோழ வளநாடு சிறந்து திகழ்கிறது. அதிலும் சிறந்தது  மயிலாடுதுறை என கூறுவது பெரும் மகிழ்வை  தருகிறது. மயிலாடுதுறை எனப் பெயர் பெற்ற இவ் ஊரில் மயிலுருவில்  ஆடிய நடனத்தை கௌரி தாண்டவம் என்றும் மாயூரதாண்டவம் என்றும் இத்தலத்தை அழைப்பர்.“  திருவாவடுதுறைசைவ ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மயூரநாதர் ஆலயம், மாயூரம் பெரிய கோயில் எனவும் வழங்கப்படுகிறது. மிகத் தொன்மையானது. நான்கு பக்க சுற்று மதில்களும் கிழக்கே ஒன்பது நிலை மாடம் கொண்ட 160 அடி உயர சிற்பங்கள் நிறைந்த  பெரிய ராஜ கோபுரமும் அமைந்துள்ளது. கோயிலின் பரப்பளவு சுமார் 3,80,000 சதுர அடியாகும். பல மண்டபங்கள் உள்ளன. சுவாமி கோவிலும் அம்பாள் கோவிலும் அமைந்துள்ளன. மண்டப தூண்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் கோவில் தூண்களும் பிரகாரங்களும் சிறப்பு வாய்ந்தவை. அம்பாள் ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. கோயில் கோபுரத்திற்கு அருகில் தீர்த்தக்குளம் நான்கு புறத்திலும்  நீராடுவதற்கு ஏதுவாக படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ளது. இங்கு தெப்ப உற்சவம் சிறப்பு நடைபெறும். இறைவன் பெயர் ஸ்ரீ மாயூரநாதர். இறைவி பெயர் ஸ்ரீஅபயாம்பிகை அம்மை/ ஸ்ரீ அஞ்சல் நாயகி என்றும் அழைப்பர். மாயூரநாதருக்கு வள்ளல் என்ற பெயரும் உண்டு. கொடி மரத்தின் தெற்கு பக்கத்தில் பெரிய விநாயகரும் வடக்குப் பக்கத்தில் ஆறுமுக பெருமானும் உள்ளார்கள். வெளிப்பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக கோவில் ஒன்று உள்ளது. அதுவே ஆதி மயூரநாதர் கோயில் ஆகும். இங்கு தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு மயில் உருவம் உள்ளது.  அம்மையார் மயில் உருவம் பெற்ற நிலையை குறிப்பது ஆகும். அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட அகத்திய விநாயகர் சுவாமி விமானத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளார். களஞ்சியம் பிள்ளையார் வெளித் திண்ணையில் உள்ளார். அபயாம்பிகை அபிய பிரதானிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை, மயிலம்மை என பல திருப்பெயர்கள் கொண்டு விளங்கும் அம்பாள் அபயாம்பிகை சன்னதியும், அவரின் அற்புதமான உருவம் கருணை ததும்பும் முகம், நின்ற கோலம், சங்கு சக்கரங்கள் மேல் இரண்டு கைகள் உள்ளன இடது திருக்கரம் தொடை மேல் தொங்குகின்றது. வலது திருக்கரத்தில் கிளியும் அபய ஹஷ்தமும் காணப்படுகின்றது. அது *நான் இருக்கின்றேன் அஞ்ச வேண்டாம்* என்று அபய வரத முத்திரையை காட்டி அருள் பாலிக்கும் அற்புதமான உருவம் ஆகும்.  அம்மையின் கற்ப கிரகத்தின் தென்புறத்திலே ஒரு சிவலிங்க திருமேனி விளங்குகின்றது. அதன் நாமும் அனவித்யாம்பிகை ஆகும். அந்த சிவலிங்க பெருமானுக்கு புடவை சாத்துவது வழக்கம். நாத சன்மாவின் மனைவியாகிய அனபித்தை இறைவனை பூஜித்து சிவலிங்கத்தில் ஐக்கியமானதால் அனவித்தை  சிவலிங்கமாக விளங்குகிறார் என்று வரலாறு கூறுகிறது. ஆகவேதான் சிவபெருமானுக்கு புடவை சாத்தப்படுகிறது. இக்கோயிலின் தீர்த்தங்கள் இடப தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அண வித்தியாசரஸ் அகத்திய தீர்த்தம் ஆகும். ஸ்தலவிருட்சம் மாமரம். அதனால்தான் இத்தலத்திற்கு சூதவனம் என்ற வடமொழி பெயர் உண்டு. இங்குள்ள சபைக்கு ஆதி சபை என்றும்  பெயர். இக்கோவிலின் நடனம் கௌரி தாண்டவம் ஆகும் . இறைவன் ஆண் மயிலாகவும் இறைவி பெண் மயிலாகவும் உருகொண்டு தாண்டவம் ஆடினார்கள். இத்தாண்டவம் மாயூர தாண்டவம் என்று வழங்கப்படுகின்றது. கையிலையில் உமையமைக்கு ஈசன் பிரணவ பொருளை உபதேசம் செய்கையில் அன்னையின் கவனம் அருகில் இருந்து ஆடிக்கொண்டிருந்த அழகு மயில் பால் சென்றது. குருவின் உபதேசத்தை அலட்சியம் செய்தமைக்காக பூவுலகில் மயில் உருகொண்டு தவமிருக்கும் படி ஈசன் ஆணையிட்டார். மீண்டும் மகேசனோடு இணைவதற்காக மயில் உருவில் இத்தளத்தில் உமையம்மை தவமிருந்து அருள் பெற்றதால் மயிலாடுதுறை என பெயர் பெற்றது.        துலா உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவின்பொழுது இத்தாண்டவத்தினை பக்தர்கள் காணலாம். ஐப்பசி அமாவாசை கடை முழுக்கு, மறுநாள்  முடவன் முழுக்கு விசேஷமானது. திருக்கல்யாண உற்சவமும் கண்கொள்ளாக் காட்சியாகும். சோழநாடு, வளநாடு, சென்னிநாடு, அபயநாடு, கில்லி நாடு, செம்பியர் நாடு முதலிய சோழர்களுக்குரிய பல்வகைப் பெயர்களில் போற்றுகிறார்கள். ஞானசம்பந்தரின் பாமழையால் புறச் சமயங்களாகிய சமண, பௌத்த மதங்கள் ஒழிந்தன. அதுபோல மழையால் வேனில் வெப்பம் நீங்கியது எனக் கூறும் கற்பனை பக்திமையை எடுத்துக்காட்டுகிறது. சோழ நாட்டில் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் ஆகிய ஐந்திணைகளையும் உள்ளடக்கியதாக விளங்கிய தாகவும், மருதம் எனப்படும் வயலும் வயலைச் சார்ந்த நிலமும், வளஞ்சேர்க்கும் காவிரியாரும் சிவபெருமானையும் அம்பிகையையும் நிகர்ப்பதாக கூறும் பாடல்கள், கற்போருக்கு பெரும் விருந்தாக அமையும் சிறப்புடையது. வேளாண்மை செய்யும் வேளாளர் விளைவு செய்யும் வேளாண் முறைகள் அழகுற கூறப்பட்டுள்ளன. மருதநில ஊர்களாக மாயூரம், திருவையாறு, குடந்தை, இடைமருது, திருவாவடுதுறை, அம்பர், திருவீழி மிழலை, திருவாஞ்சியம், நன்னிலம், திருவாரூர் ஆகியன கூறப்படுவது மிகவும் போற்றுதலுக்குரியது. நகரப் படலத்தில் மயிலாடுதுறை சிவலோகம் போல் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மாயூரம் நகரில் கருப்பங்காட்டோடு மாஞ்சோலைகள் செறிதரும் காட்சியை ஞானசம்பந்தரும், அப்பரும் அடியவர் கூட்டங்களோடு கலந்ததை போன்றது என்கிறார்.  மயிலாடுதுறையில்  வேளாளர் விருந்தினர்களை உண்பிக்கும் சிறப்புடையது என்றும் கூறப்படுகிறது.         *அம்பிகை மயிலுருவாய் பூசித்து வரம்பெறு படலத்தில் அம்பிகை சிவபெருமானிடம் இத்தலம் கௌரிமாயூரம் என வழங்கப்பட வேண்டும் எனவும், இத்தலத்தில் வாழ்வார்க்கு எல்லா நலங்களையும் தந்தருள வேண்டுமெனவும் வரம் பெற்றார்* . தேவி ஆராதனை படலத்தில் இறைவனுக்கு சாத்தும் மலர்கள் அபிஷேகப் பொருட்கள் நிவேதனப் பொருட்கள்  முறையாக கூறப்படுகின்றன. சிவபெருமான் அம்பிகைக்காக நின்றாடிய கௌரி தாண்டவம் இத்தலத்தில் நிகழ்த்திய திரு நடனம் ஆகும். இத்தலத்தின் பெரு விழாக்களில்  மயிலம்மன் பூஜையன்று இது நிகழும்.       சிவபெருமான் உமையம்மை எனப்படும் அபயம்பிகையை மனம் புரிந்த தலங்களில் மயூரத்தலமும் ஒன்றாகும். அம்மை மயில் உருவாக சிவபெருமானின் மனம் புரிந்த ஐதீக விழாவும் இத்தலத்தில் நிகழும் சிறப்பு மிக்க நிகழ்வாகும். *மயூர தல விசேட படலத்தில் பாவச் செயல்களின் நீண்ட பட்டியலை அதாவது மிகப்பெரிய பாவங்களை புரிந்தோறும் கூட மயூர தலத்தடைந்து ரிஷப தீர்த்தத்தில் நீராடி மயூர ஈசனை வழி படின் பாவம் முற்றிலும் நீக்க பெறுவர் என பெருமைக்குரியது.*          ஆகவேதான் *காசி, குருஷேத்திரம் முதலான தலங்களிலும் மாயூரம் மேம்பட்ட தலம் என கூறப்படுகிறது.* வளம் மலி சிறப்பு வாய்ந்த மாயூர தளத்தை மேவி உள்ளம் நெகிழ தர வசித்தல் உறவலஞ் சூழ்தல் இன்னும் பளகறு தானமாதி பண்ணுதல் இவைவல் லாற்குத் தளர்வு பட் டொடியு மெப்பா தகங்களும் சலித்து மாதோ...... தேவர்கள் முனிவர்கள் மனிதர்களேயன்றி யானை, குதிரை, கழுதை, கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி முதலிய விலங்குகளும் பறவைகளும் கூட இத்தலத்தை அடைந்து முத்தி பெற்றுள்ளமையை காண முடிகின்றது. காவிரியின் வடபால் தட்சிணாமூர்த்தி தோன்றி உபதேசம் செய்த சைவ சித்தாந்த அடிப்படை உண்மைகள் உணர்த்துகிறது. காசியில் உள்ள  கங்கை தன் பாவத்தைப் போக்க காவேரியில் நீராட வந்தமையால் அங்குள்ள விசுவநாதர் விசாலாட்சி அம்மையுடன் இத்தலத்தில் விளங்குகின்றார். ஐப்பசி மாதம் முழுவதும் இங்குள்ள காவிரி  துலாக்கட்டத்தில் கங்கை நீராடுவதால் இந்நாட்களில் இங்கு காவேரி நீராட்டு போற்றப்படுகிறது. ஐப்பசி திங்களின் இறுதி பத்து நாட்கள் தான் இத்தல பெருவிழா நிகழும். மயூரநாதரை அவயம்பிகையை வழிபடுவோர், பார்போர், கேட்போர் உதவுவோர் பூஜிப்போர், பொருள் தருவோர் இம்மையில் மனைவி, மக்கள், செல்வ வளங்களோடு வாழ்ந்து மறுமையில் சிவனடி கூடி இன்புறுவர். மயூரநாதரை தங்களுடைய  இல்லத்தில் வைத்து வழிபடுவோர், பூஜிக்கின்ற இல்லத்தை பூத பிரிது பைசாசங்கள் அணுகாது அவ்வில்லத்திற்கு அனைத்து சம்பத்துகளும் வந்து சேரும்........ பார் பூத்த மயூரநாதர் நகர் வாழ்க! அருள் வள்ளல் பரமன் வாழ்க! ஏர்பூத்த கருந்தடங்கண் அஞ்சல் நாயகி வாழ்க! இவருக்கென்று நார்பூத்த மனத்தன்பர் வாழ்க !பெருஞ் சைவ நெறி நன்கு வாழ்க! சீர் பூத்த அம்பலத்துள் ஆனந்த நடம் நவில் குஞ்சிதத்தாள் வாழ்க.! இப்பேற்பட்ட புகழும் பெருமையும் தொன்மையும் மிக்க திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஸ்ரீ மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவில் கும்பாபிஷேகம், *திருவாவடுதுறை 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரியார் சுவாமிகள்* அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம், 2023 செப்டம்பர் 3தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்  மிக  பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. கொடை உள்ளம் கொண்ட திருப்பணிதாரர்கள் கைங்கரியத்தால் ராஜகோபுரம் முதல் சுவாமி, அம்பாள் விமானங்கள், மேல் தளங்கள் தரைத்தளங்கள், திருக்குளம் வரை அனைத்து சன்னதிகளும் அழகுற திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கங்கையின் பாவத்தையே போக்கிய காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள கோவிலின் திருக்குடமுழுக்கு பெரு விழாவில் அற்புதமான வேலைபாடுகளுடன் கூடிய யாக சாலைகள் அமைக்கப்பட்டு 120 யாக குண்டங்கள், 500க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று, எட்டுக்கால பூஜைகள், எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, தன பூஜை, சஹஸ்ர மோதக கணபதி ஹோமம், கஜ பூஜை, வாஸ்து சாந்தி,  ப்ரவேசபலி, ரக்ஷோக்ந ஹோமம், நவகிரக ஹோமம்,ஆசார் பதசவித க்ரியை- ம்ருக்சங்க்ரஹணம், கிராம சாந்தி, அங்குரார்ப்பணம், ப்ரதான ஆசாரிய ரக்ஷா பந்தனம், அங்குர யாகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை, சப்தசதி பாராயணம், சகஸ்ர பங்கஜ மகாலட்சுமி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், தீர்த்த சங்கிரஹனம், மந்திர, பத, வர்ணபுவன, தத்வ, கலாதி பூஜை ஹோமம், ருத்ர பாராயணம், பிரசன்னா அபிஷேகம், சங்க கிரகணம், யாத்ரா ஹோமம், கடஸ்தாபனம் வர்ஷினி தீப நவ சுமங்கலி பூஜை, நவ கன்யா பூஜை, மருந்து சாத்துதல், 108 அடியார்க்கு சிவ பூஜை, சுகாசினி பூஜை, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, பிம்ப சுத்தி ரக்ஷா பந்தனம், நிறைவாக யாத்ரா தானம் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுதல், மேலும் 82 மணி நேர தொடர் வேத பாராயணம், திருமுறை பாராயணங்கள் ஆகியவை  *சிவஸ்ரீ ஏ.வி. சாமிநாத சிவாச்சாரியார்* அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும். அனைவரும் பங்கேற்று இறைவனின் அருளுக்கு பாத்திரமாக அன்புடன் அழைக்கின்றோம். வாரீர் !வாரீர்.!! *அ.அப்பர்சுந்தரம் சமூக செயற்பாட்டாளர் மயிலாடுதுறை.*     .
Previous Post Next Post