குதிரை கொலை எங்கும் நடக்காத கொடுமை! கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! திருநெல்வேலி நகரில் பந்தயக் குதிரை அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் மனதுயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இப்படிப்பட்ட கொடூர கொலை நடைபெற்றதாக வரலாறு இல்லை. மனித மனம் குரோத தன்மையோடு சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. பழிக்குப் பழி வாங்குவதற்காகவோ, சொத்துப்பிரச்சனைக்காகவோ, அரசியல் சமுதாய காரணங்களுக்காகவும் மனிதர்களை மனிதரே வெட்டிக் கொள்ளுகின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவதை அறிந்திருப்போம். ஆனால் வாயில்லா ஜீவன் அதுவும் குதிரைப் பந்தயத்தில் வெல்லக்கூடிய திறமை வாய்ந்த குதிரை மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். வாயில்லா ஜீவன்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ள மனிதர்களே அதனை வெட்டி சாய்ப்பது இனியும் நிகழாமல் இருக்கும் அளவிற்கு பாதக செயலில் ஈடுபட்டவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். சமூகப் பிரச்சனையோ தனிப்பட்ட பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது அங்கு கட்டப்பட்டு இருக்கின்ற கால்நடைகளையோ, மாடுகளையோ தாக்குவது எந்தவிதத்தில் நியாயமானது? மிகவும் கோழைத்தனமானதாகும். ஒரு சிலர் கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது அங்கே கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் பால் கறக்கும் காம்புகளையும் பால்மடியையும் அறுத்து எறிந்த காட்சி இன்றும் நெஞ்சை பிளந்து கண்ணீரை வரவழைக்கின்றது. அன்பு பண்பு பாசம் நிறைந்த தமிழ்நாட்டிலா இப்படி நடக்கிறது . என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் மது,கஞ்சா போதையிலோ இதர நிலையிலோ இப்படிப்பட்ட சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க ஊர் பெரியவர்கள், நாட்டாமைகள் மக்களின் எண்ணத்தை நல்ல திசையில் திருத்தி மாற்றுவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். எங்கும் எதிலும் போட்டி மனப்பான்மையை தவிர்த்து, விட்டுக்கொடுத்தல், கூடி வாழ்தல் போன்ற நற்பண்புகளை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் நம்முடைய பண்டைய கால பண்பாட்டினை மீண்டும் உருவாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளமிட அனைவரும் சபதமே ஏற்போம்.