புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க நடவடிக்கை- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் முன் உதாரணமாக எப்போதும் திகழ வேண்டும். கடந்த 4 மாதங்களில் 4 ஆயிரம் பயனாளிகள் மத்திய அரசு திட்டங்களில் புதுச்சேரி அரசு சேர்த்துள்ளது. விடுப்பட்ட பயனாளிகளையும் இத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அடுத்த ஓராண்டிற்குள் மத்திய அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். புதுச்சேரியில் பழங்குடியினர் குறைவாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து பயனடைய செய்ய வேண்டும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும். புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சகத்திடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்