சேலம் தனியார் குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தாக்கிய 3 ஊழியர்கள் கைது



சேலம் தளவாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அகிலா(40).இவரது கணவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவர்களுக்கு 9 வயதில் சூர்யா வாசன் என்ற (மனவளர்ச்சி குன்றிய)சிறப்பு குழந்தை உள்ளது. அகிலா ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார். பணிக்கு வரும் பொழுது சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் சிறப்பு குழந்தைகளை கவனிக்கக்கூடிய மறுவாழ்வு மையத்தில் சூர்யா வாசனை விட்டுச் செல்வார். இந்நிலையில் சிறப்பு மறுவாழ்வு மையத்திலிருந்து சூர்யாவாசனை வீட்டுக்கு அழைத்து வந்த போது அவனது காலில் வீக்கம் காணப்பட்டது. 



இது பற்றி அந்த தனியார் மையத்திற்கு சென்று அகிலா கேட்டார். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சூர்யாவாசனை மூன்று பேர் கம்பால் அடித்ததே அவனது காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.இதனை பார்த்து கதறி அழுத அகிலா ஊழியர்களை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் அகிலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து எச்சரித்தனர்.

 


இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலா இது பற்றி அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தையை அடித்ததாக மையத்தின் ஊழியர்களான நங்கவள்ளியை சேர்ந்த பாலாஜி (28), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த எஸ்தர் (28), அழகாபுரம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த திருப்பதி (29) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post