திருப்பூர், முருகம்பாளையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் (வையர் கிரிக்கெட் மைதானம்) வளாகத்தில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் பயிற்சி மையத்தினை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் \இன்று காலை தொடங்கி வைத்தார்.
இந்த மைதானமானது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் மூலமாக நேரடியாக ஒரு வருடத்திற்கு நிர்வகிக்கப்படவுள்ளது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவி செயலாளரான பாபா மற்றும் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமியின் நிறுவனர் ரமேஷ், இணை செயலாளர் செல்லமுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வலைப்பயிற்சி மைதானத்தை தொடங்கி வைத்து பவுலிங் மற்றும் பேட்டிங் பயிற்சி செய்த நடராஜனிடம் திருப்பூர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் குழந்தைகள் ஆட்டோகிராப் பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், ‘20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொன்றும் தனித்துவமானது எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான் திறமையை நிரூபிக்க முடியும். தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது ஐபிஎல் டிஎன்பிஎல் போன்ற விளையாட்டுக்கள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் ஐபிஎல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என கேட்டுக் கொண்டார்.