ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழத்தி இந்த சீஸனில் தங்களின் 5வது வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக, டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அற்புதமாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ராம் அர்விந்த் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு இந்த சீஸனில் அதிவேக அரைசதத்தை இந்தப் போட்டியில் அடித்தார். சேலம் ஸ்பார்ட்டன்ஸைப் பொறுத்தவரை சன்னி சந்து சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.இன்றைய ஆட்டத்தை வெல்ல 20 ஓவர்களில் 200 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆரம்பம் முதலே விக்கெட்களை பறிகொடுக்கத் தொடங்கியது. அந்த அணியின் ஒப்பனர்கள் அமித் சாத்விக்(0) ரன் எதுவும் எடுக்காமலும் மற்றொரு ஓப்பனர் மோகித் ஹரிஹரன் 7 ரன்களிலும் கௌதம் தாமரை கண்ணனிடம் விக்கெட்களை இழந்தனர். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பவர்ப்ளேவிற்குள்ளாக 4 முக்கிய பேட்டர்களின் விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது.சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் சன்னி சந்து 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து சிறிது ஆறுதல் அளிக்க அவரும் தனது விக்கெட்டை ரன்அவுட்டில் பறிகொடுக்க, அத்நான் கானும் ஷாரூக் கானின் ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் 4 முறையாக தோல்வியைத் தழுவியது. மறுபுறம் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 5வது வெற்றியைப் பதிவு செய்ததோடு புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும் டி.என்.பி.எல் 2023 ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாக லைகா கோவை கிங்ஸ் நுழைந்து மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
லைகா கோவை கிங்ஸின் பௌலிங்கில் அதிகபட்சமாக கௌதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்களை வீழ்த்த, அந்த அணியின் கேப்டன் ஷாரூக் கான் தனது மதிநுட்பமிக்க பந்துவீச்சால் 2 விக்கெட்களைக் கைப்பற்றியதோடு ஏத்தர் பர்ப்பிள் கேப் பட்டியலில் அதிக விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்திலுள்ளார்.வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸின் கௌதம் தாமரை கண்ணன் பேசுகையில், 'எங்கள் வெற்றிக்கு பிரத்யேகமான காரணங்கள் எதுவுமில்லை ஒரு அணியாக நல்ல திட்டத்துடன் களமிறங்கி அதை முடிந்தவரை சரியாக செயல்படுத்துகிறோம்.இன்றையப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற ராம் அர்விந்த் பேசுகையில், "முதல் இன்னிங்ஸிற்குப்பின் தான் இந்த சீஸனின் அதிவேக அரைசதம் அடித்தேன் என்பதை தெரிந்து கொண்டேன். எங்கள் அணியில் நல்ல அதிரடி வீரர்கள் இருப்பதால் தைரியமாக நானும் அத்திக் உர் ரஹ்மானும் விளையாடினோம் அது தான் எங்கள் ரன் உயர காரணமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.தோல்விக்குப்பின் சேலம் ஸ்பார்ட்டன்ஸின் கேப்டன் அபிஷேக் தன்வார் பேசுகையில், "இந்த விக்கெட் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்தது ஆனால் நாங்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை அதோடு டெத் ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது எங்களுக்கு மிகுந்த பின்னடைவைத் தந்தது. மீதமுள்ள போட்டிகளில் வெல்ல கண்டிப்பாக முயற்சிப்போம்" என்று அபிஷேக் தன்வார் தெரிவித்தார்.
வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கான் பேசுகையில்," முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்தியாவின் டொமஸ்டிக் போட்டிகளில் விளையாட சாய் சுதர்ஷன் செல்வதால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் இடம் பெறவில்லையென்றாலும் எங்கள் வசம் இன்னும் பல வீரர்கள் அவரின் இடத்தை நிரப்ப உள்ளனர்.முக்கியமாக இந்த சீஸனில் எங்களின் பல வீரர்கள் அதிக ரன்களை எடுத்துள்ளனர் என்பதால் பலவீனம் எதுவும் எங்கள் வசமில்லை” என்று ஷாரூக் கான் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்