டி.என்.பி.எல் 2023 சீஸனில் சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது,ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.முன்னதாக,சீகம் மதுரை பேந்தர்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 4/23 என்று தங்களின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை இந்த சீஸனில் பதிவு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அவர்களின் கேப்டன் அபிஷேக் தன்வார் மட்டும் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார் அவரைத் தவிர மற்ற எந்த பேட்டரும் 20 ரன்களும் தொடவில்லை. இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 19.4 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் குர்ஜப்நீத் சிங் சிறப்பாக பந்துவீசி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது சிறந்த பந்துவீச்சை இந்தப்போட்டியில் 4/15 பதிவு செய்தார்.அவருக்கு துணையாக முருகன் அஷ்வின் மற்றும் வி.கெளதம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மேலும் இந்த சீஸனில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பதிவு செய்ய சீகம் மதுரை பேந்தர்ஸின் முக்கிய பௌலர்கள் வித்திட்டனர்.டி.என்.பி.எல் 2023 சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு வெறும் 99 ரன்களே தேவை என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே அந்த அணியின் கேப்டன் சி.ஹரி நிஷாந்த்(0) ரன் எடுக்காமல் தனதுவிக்கெட்டை இழந்தார். அதன் பின்னர், வி ஆதித்யா (8) மற்றும் ஜெ கௌஷிக் (21) ரன்களில் தங்களது விக்கெட்களை பறிகொடுக்க 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ஸ்ரீ அபிஷேக் (32* ரன்கள் 28 பந்துகள்) மற்றும் ஸ்வப்னில் சிங்(25*ரன்கள் 15 பந்துகள்) இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்திப் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற குர்ஜப்நீத் சிங் பேசுகையில், சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி, நாளுக்கு நாள் எனது பௌலிங்கில் முன்னேற்றம் அடைகிறேன். இன்று 2 புள்ளிகளை எங்கள் அணி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.தோல்விக்குப்பின் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் கேப்டன் அபிஷேக் தன்வார் பேசுகையில், "அனைவருமே மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.இன்றைய ஆட்டத்தில் நாங்கள் எதையும் திட்டமிட்டபடி செய்யவில்லை, நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம் அதன் பலனை இந்த தோல்வியின் மூலம் அனுபவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்ட செய்தியாளர் - சதீஷ்குமார்.